'கந்தசாமி' 100-வது நாள் விழா: 'கிராமங்களை தத்தெடுத்தவர்களே உண்மையான ஹீரோக்கள்'- விக்ரம்

சென்னை,​​ டிச.​ 25: ​ ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அவர்களுடைய கிராமங்களைத் தத்தெடுத்தவர்களே உண்மையான ஹீரோக்கள்;​ என்னைப் போன்றவர்கள் சினிமாவில் மட்டுமே ஹீரோக்கள் என்றார் நடிகர் விக்ரம்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,​​ சுசிகணேசன் இயக்கத்தில் விக்ரம்-ஸ்ரேயா நடித்த 'கந்தசாமி' படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வெற்றி விழாவில் நடிகர் விக்ரம்,​​ நடிகை ஸ்ரேயா,​​ இயக்குநர் சுசிகணேசன் உள்பட படத்தில் பணியாற்றியவர்களுக்கு தத்தெடுக்கப்பட்ட வன்னிவேலம்பட்டி கிராம மக்கள் விருது வழங்கிச் சிறப்பித்தனர்.

விழாவில் விக்ரம் பேசியதாவது:

இந்த விழா நடைபெறும் நடிகர் சங்கக் கட்டடத்தில்தான் 10 வருடங்களுக்கு முன்பு நான் நடனம் பயின்று வந்தேன்.​ என்னை யாராவது நடிகராக்கி விட மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு இந்த ஏரியாவைச் சுற்றி வந்த காலங்களை மறக்க முடியாது.​ இன்று அதே நடிகர் சங்கக் கட்டடத்தில் நான் நடித்த படத்தின் 100-வது நாள் விழா நடைபெறுவதும் இதில் என் தந்தை கலந்துகொண்டிருப்பதும் பெருமையாக இருக்கிறது.

இதை விட 'கந்தசாமி' படத்தின் மூலம் பல கிராமங்களைத் தத்தெடுக்கும் ஒரு நல்ல முயற்சி தொடங்கப்பட்டிருப்பதில்தான் அதிக சந்தோஷம்.​ சினிமாவில் கதாநாயகனாக மட்டுமே நடிக்கும் என்னைப் போன்றவர்களெல்லாம் ஹீரோக்கள் கிடையாது.​ ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக கிராமங்களைத் தத்தெடுத்தவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள் என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியபோது...​ இந்தப் படம் தரத்திலும் வசூலிலும் மிகப் பெரிய வெற்றி பெற்றதற்கு விக்ரம்,​​ சுசிகணேசன் ஆகியோரின் கடுமையான உழைப்புதான் முதல் காரணம்.​ விக்ரம் நினைத்திருந்தால் 'கந்தசாமி' படத்தில் நடித்த காலகட்டத்தில் ஐந்து,​​ ஆறு படங்களில் நடித்து பெரிய அளவில் பணம் சம்பாதித்திருக்க முடியும்.

ஆனால்,​​ அவ்வாறு செய்யாமல் ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் காட்டிய ஈடுபாடு மறக்க முடியாதது.​ எனக்கு கால்ஷீட் கொடுத்து இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படத்தைத் தயாரிக்கக் காரணமாக இருந்த விக்ரமுக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என நெகிழ்ந்தார்.

இயக்குநர் சுசிகணேசன் நன்றி தெரிவித்தார்.

இந்தப் படத்தின் தொடக்க விழாவில் 'கந்தசாமி அறக்கட்டளை' என்ற பெயரில் டிரெஸ்ட் தொடங்கப்பட்டு 30 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டன.​ முதல் கட்டமாக மதுரை அருகேயுள்ள வன்னிவேலம்பட்டி கிராமத்தில் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றவும் சாலை மற்றும் இதர வசதிகளுக்காகவும் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது.

விழாவில்,​​ புதிதாக கிராமங்களைத் தத்தெடுக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட டாக்டர் ஜோதிமணி,​​ அடையாறு ஆனந்தபவன் உரிமையாளர் கே.பி.சீனிவாசராஜா,​​ மஹா பொறியியல் கல்லூரி ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோரும் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன்,​​ நடிகை ஸ்ரேயா,​​ இயக்குநர் கே.பாக்யராஜ்,​​ நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்,​​ விக்ரமின் தந்தையும் நடிகருமான வினோத்ராஜ்,​​ வன்னிவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Comments

Most Recent