தமி்ழ் சினிமாவைக் கலாய்க்கும் தமிழ்ப் படம்!



வெற்றி பெற்ற பிரபல படங்களைக் கலாய்த்து சினிமா எடுப்பது ஹாலிவுட்டில் ஒரு ட்ரெண்ட். இப்படி வெளியான படங்கள் பல மெகா ஹிட் படங்களாக வசூல் பார்த்துள்ளன ஆங்கிலத்தில்.

தமிழிலோ வெற்றி பெற்ற படங்களை அப்படியே சுட்டுத்தான் பழக்கம். அல்லது நாராசமாக கிண்டலடித்துவிடுவார்கள். அதை நாசூக்கான, வயிறு குலுங்கும் காமெடி படங்களாகத் தரும் அளவு யாரும் மெனக்கெடுவதில்லை.

முதல் முறையாக அப்படியொரு முயற்சியில் இறங்குகிறது ஒரு இளைஞர் குழு. 'வொய் நாட்' (Y NOT) எனும் புதிய நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் படம் ஒன்றை உருவாக்குகிறது. இதற்கு தமிழ்ப்படம் என்று பெயரிட்டுள்ளனர். படத்தைத் தயாரிப்பவர் வேறு யாருமல்ல... மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி.

இந்தப் படத்தின் அறிமுக விழா மற்றும் ஆடியோ வெளியீடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று கிரீன் பார்க் ஓட்டலில் நடந்தது.

இதில் பங்கேற்ற தயாநிதி அழகிரி கூறுகையில், "இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு புது முயற்சி. தமிழில் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு வந்துள்ளது. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இந்த நகைச்சுவைப் படத்தில், புகழ்பெற்ற, மாபெரும் வெற்றிப் படங்களின் அடிப்படையில் காட்சிகளை எடுத்துள்ளோம். அதேநேரம், நாங்கள் அந்தப் படங்களை எந்த வகையிலும் கிண்டலடிக்கவில்லை.

தமிழ் சினிமாவுக்கு இது ஒரு புதிய ட்ரெண்ட் என்று சொல்ல வேண்டும். வெற்றி பெற்ற படங்களை கவுரவிக்கும் முயற்சி இது என்று கூடச் சொல்லலாம்", என்றார்.

இந்தப் படத்தின் நாயகனாக சிவா நடித்துள்ளார். சலங்கை ஒலி கமல் ரேஞ்சுக்கு பரத நாட்டியமெல்லாம் ஆடியுள்ளாராம். தீஷா பாண்டே என்ற மும்பை மாடல் இதில் அறிமுகமாகிறார் நாயகியாக. தமிழில்தான் இவருக்கு முதல் படம். தெலுங்கில் ஏற்கெனவே படம் செய்துள்ளாராம்.

கண்ணன் இசையமைத்துள்ளார். இவரும் புதுமுகம்தான். இன்று தொலைக்காட்சியில் ஒலிக்கும் பல விளம்பர ஜிங்கில்ஸுக்கு இவர்தான் இசையமைப்பாளர். சிஎஸ் அமுதன் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.

Comments

Most Recent