சென்னை: சமீபத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்ட நடிகர்கள் சூர்யா, வடிவேல் மற்றும் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் ஆக...
சென்னை: சமீபத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்ட நடிகர்கள் சூர்யா, வடிவேல் மற்றும் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரின் வங்கி லாக்கர்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை திறந்து பார்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் மேற்கண்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதேபோல புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு திரைப்பட பைனான்சியர் வீடும் ரெய்டில் சிக்கியது.
90 அதிகாரிகள் 25 குழுக்களாக பிரிந்து இந்த சோதனையை நடத்தினார்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மறுநாள் புதன்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடித்தது.
இந்த சோதனையில் நடிகர்களின் வீடுகளில் இருந்து முக்கிய சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நகைகள், கணக்கில் வராத பல லட்சம் ரொக்கப் பணம் ஆகியவையும் கிடைத்தன. இதுபற்றி வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர்களின் வங்கி லாக்கர்களை திறந்து பார்க்க வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நடிகர்களின் வங்கி லாக்கர்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
இந்த லாக்கர்களை அடுத்த வாரம் திறந்து சோதனை நடத்த இருப்பதாக வருமான வரித்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
கணக்கில் வராத பணம் - நகை மீட்பு...
இந்த சோதனையின்போது ஒரு நடிகரின் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 80 லட்சம் பணம் சிக்கியதாம்.
அதேபோல இன்னொரு நடிகரின் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ கணக்கில் வராத நகை சிக்கியதாம்.
இந்த இருவரின் வங்கி லாக்கர்களைத்தான் முக்கியமாக சோதனை போடவுள்ளனராம். அதிலும், பணம், நகைகள் வைக்கப்பட்டிருக்கலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும் ரெய்டு நடத்தப்பட்ட நான்கு கலைஞர்களும் வருமான வரித் தாக்கலில் பல முறைகேடுகள் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாம்.
Comments
Post a Comment