அங்கீகாரம் அல்ல; பாராட்டு -இளையராஜா


சென்னை, ஜன.25: பத்ம பூஷண் விருது அங்கீகாரம் அல்ல; பாராட்டுதான் என்றார் இசையமைப்பாளர் இளையராஜா.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் 2010}ம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இசை உலகில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ள இவர்களுக்கு இசை பணிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

இளையராஜா: தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் 1943-ம் ஆண்டு பிறந்த இளையராஜா, 1976}ம் ஆண்டு வெளிவந்த "அன்னக்கிளி' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 787 படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ள இளையராஜா, 4,000}க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

தமிழின் நாட்டுப்புற இசையை அதன் தரம் குறையாமல் வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசு விருது, அண்ணாமலை பல்கலைகழகத்தின் முனைவர் பட்டம், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் முனைவர் பட்டம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற இளையராஜா இசைக்கான தேசிய விருதுகளை மூன்று முறை பெற்றுள்ளார்.

இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் ஆர்வம் கொண்ட அவர், "வழித்துணை', "துளி கடல்', "ஞான கங்கா' உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். ரமண மகரிஷி மீது தீரா பற்றுக் கொண்ட இவர் "ராஜாவின் ரமண மாலை' என்ற இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

விருது பெற்றது குறித்து இளையராஜா செய்தியாளர்களிடம் கூறியது: ""விருது பெற்றதில் என்னை விட பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிகம் சந்தோஷம் இருக்கிறது. அதில் எனக்கும் சந்தோஷம். இந்த விருது கேட்டுப் பெற்றது அல்ல, தானாகக் கிடைத்தது.

தாமதமாக கிடைத்தாலும் இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி.  எனது இசைப் பணிக்கு கிடைத்த கௌரவமாகவே இந்த விருதை நினைக்கிறேன். ஆனால் இந்த விருதை என் இசைப் பணிக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளவில்லை. பாராட்டாகத்தான் எடுத்துக் கொள்கிறேன்.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருது கிடைத்திப்பது பற்றி கருத்து கேட்ட போது, அவரும் நல்ல இசைக் கலைஞர், வாழ்த்துகள் என்றார்.

பொதுவாக தேசிய விருதுகள் பட்டியலில் தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவது பற்றி கேட்ட போது இது பற்றி சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகளிடம்தான் கேட்க வேண்டும். அதற்கு நான் பொறுப்பல்ல'' என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான்: 1966- ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ள ரஹ்மானுக்கு 2008}ம் ஆண்டுக்கான "கோல்டன் குளோப்' மற்றும் "பாஃப்டா' விருதுகள் கிடைத்தன. "ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார்.  "ரோஜா', "மின்சாரக் கனவு', "லகான்' (ஹிந்தி), "கன்னத்தில் முத்தமிட்டால்' ஆகியப் படங்களுக்காக இவர் தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.

மலேசிய அரசின் விருது, ஆலிவர் விருது, இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ  விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் கால்பதித்துள்ள இவர் "கப்பிள்ஸ் ரிட்ரீட்' என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Comments

Most Recent