கெளதம் மேனனின் 'ஓமணப் பெண்ணே...'



விண்ணைத்தாண்டி வருவாயா ஆடியோ வெளியாகி விட்டது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக ஓமணப்பெண்ணே என்ற மலையாளம் கம் தமிழ் கலந்த பாடல் ரசிகர்களை வசீகரிக்கத் தொடங்கியுள்ளது.

கெளதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு, திரிஷா இணை சேர்ந்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. இப்படத்தின் மூலம் ரஹ்மானுடன் முதல் முறையாக கெளதம் மேனன் இணைந்துள்ளார்.

சென்னையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் கேசட்டை வெளியிட, கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

நீண்ட பேச்சுக்கள் இல்லாமல், சுருக்கமாக இருந்தது இந்த விழா. படத்தின் பாடல்களைப் பாடியுள்ள சின்மயி, கார்த்திக், தேவன், விஜயப்பிரகாஷ், பிளேஸ், அல்போன்ஸ், நரேஷ் ஐயர், பென்னி தயாள் ஆகியோர் தங்களது பாடல்களை மேடையில் பாடினர்.

பின்னர் பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன. இதுவரை பார்த்திராத அழகுடன் சிம்பு படு ஹேன்ட்சம் ஆக காட்சியளித்துள்ளார் அத்தனை பாடல்களிலும். திரிஷாவின் அழகும் மயக்க வைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் கதை கெளதம் மேனனின் சொந்தக் காதல் கதை என்று ஒரு பேச்சு உள்ளது.

படத்தின் பாடல்களில் ஓமணப் பெண்ணே பாடல் அனைவரையும் வசீகரித்தது. ரசிகர்களிடமும் இந்தப் பாடல் ஹிட் ஆகி வருகிறதாம்.

இந்தப் பாடல் கடைசியாகத்தான் சேர்க்கப்பட்டதாம். ரஹ்மான்தான் ஒரு மலையாளப் பாட்டை படத்தில் சேர்க்க முடியுமா என்று கேட்டாராம் கெளதமிடம். மேனனும் உடனே சரியென்றாராம். இதையடுத்து மலையாளத்தில் வெளியான ஹிட் பாடல் ஒன்றை கவிஞர் தாமரையிடம் ரஹ்மான் போட்டுக் காட்டியுள்ளார். பின்னர் அதன் சாயலில் ஓமணப் பெண்ணே பாட்டை எழுதிக் கொடுத்துள்ளார் தாமரை.

இதையடுத்து அந்தப் பாட்டையும், மலையாள ஒரிஜினல் பாட்டையும் கலந்து இந்த ஹிட் பாட்டை உருவாக்கினாராம் ரஹ்மான்.

Comments

Most Recent