அமீர் Vs ஜெயம் ரவி?



ஜெயம் ரவி கால்ஷீட் கிடைக்க மேலும் தாமதமானால், புதுமுகம் ஒருவரை வைத்து தனது அடுத்த படமான கண்ணபிரானை துவக்கவிருப்பதாக இயக்குநர் அமீர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அமீர் முதல் முறையாக கதாநாயகனாக நடித்த படம் யோகி. இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்விப் படமாக அறிவிக்கப்பட்டதால் அப்செட்டான அமீர், இப்போது பொது மேடைகள் எதிலும் கலந்து கொள்ளாமல் மவுனம் காக்கிறார்.

விரைவில் ஒரு வெற்றிப் படம் கொடுத்த பின்னரே, மேடையில் பங்கேற்பேன் என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார். இதனால்தான் தன்னிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சந்திராவின் புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழில் பெயர் போட்டிருந்தும் வர மறுத்துள்ளார் அமீர்.

இந்த நிலையில் தான் அடுத்து இயக்கவிருந்த கண்ணபிரான் திரைப்பட வேலைகளில் பிஸியாகிவிட்டார்.

கண்ணபிரான் என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிப்பார் என்றும், இந்தப் படம் பத்து பருத்தி வீரனுக்குச் சமம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இப்போது, கண்ணபிரானில் ரவி நடிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர் இப்போது பிரபுதேவா இயக்கத்தில் இச் என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தை முடித்த பிறகு கண்ணபிரானுக்கு வரலாம் என ஜெயம் ரவியின் குடும்பம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை இது நிஜத்தில் நடந்தால், மீண்டும் ரவியிடம் கால்ஷீட் கேட்கும் மூடில் தான் இல்லை என்றும், புதிய இளைஞன் யாரையாவது வைத்து இந்தப் படத்தை பெரும் ஹிட் படமாக்கலாம் என்றும் அமீர் முடிவெடுத்துள்ளாராம்.

Comments

Most Recent