Ajith in 7th place

ஏழாவது இடத்தில் அஜித்!
தமிழ்பட உலகின் ஹீரோக்கள் பெரும்பாலும் ஃபிலிம் சுருளில் மட்டும்தான்  ஹீரோயிசம் காட்டுவார்கள். அதுவும் கிராபிஸ் உதவியோடும், ஸ்டண்ட் கலைஞர்களின் உதவியோடும் காற்றில் பறந்து பறந்து அடிப்பதில் தொடங்கி,

ஒலிம்பிலக் போல் வால்ட் சாம்பியன் கூட செய்யமுடியாத தாவல் வித்தைகளையெல்லாம் அநியாயத்துக்கும் மிகக்கேசுவலாக செய்து, இவர்கள் பண்ணுகிற அலும்புக்கு ஒரு அளவே கிடையாது.
ஆனால் அஜித் மட்டும் கொஞ்சம் அசல் மனிதராக, நிஜத்திலும் ஹீரோவாக இருக்க முயற்சிப்பவர். அடிப்படையில் பைக் பந்தய வீரரான அஜித், பிறகு ஃபார்முலா-3 கார் பந்தயங்களில் கலந்து கொண்டு கலக்கியவர். 

இப்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் கார் பந்தயத்தில் கலந்துக்கொண்டுள்ளார் அஜீத். சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில், எம்.ஆர்.எப். ரேசிங் சேலஞ்ச் 2010-போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி சுற்று பந்தயம் பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்றது. இதில் எம்.ஆர்.எப். பார்முலா 1600 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். கார்பந்தயத்தில் பங்கேற்ற அஜீத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து விட, அந்த பந்தயத்தின் நாயகனாக ஜோலித்தவர் சந்தேகமில்லாமல் அஜித்.

கார் பந்தயத்தில்  அதிக ஆர்வம் கொண்ட நடிகர் அஜீத், திரைப்படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போலவே கார் பந்தயங்களுக்கும் கொடுத்து வந்தார். இதன் மூலம் அவருடைய படங்கள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தன. ஒருவர் நிஜத்திலும் ஹீரோவாக இருப்பதை சமூகமும் , குடும்பமும் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ளுமா என்ன?! தயாரிப்பாளர்களின் அலறிய அலறலைக் கேட்ட அஜீத் வெறுத்துப்போய்,  பந்தயங்களில் கலந்துக்கொள்வதை தவிர்த்துவிட்டார்.

இப்போது சென்னையிலேயே பந்தயம் என்பதால் சம்மதித்தாரம்  அஜித்தின் துணைவியார் ஷாலினி.  நேற்று நடந்த முதல் பந்தயத்தில் அஜீத்தின் காரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக போட்டியில் இருந்து அஜீத் விலகினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து ஆவேசப்பட்டனர். இதனால் 2-வது பந்தயத்தில் பங்கேற்ற அஜீத்,  ஏழாவது இடத்தை பிடித்தார். ஒரு நடிகன் நம்மோடு கார் ஓட்டி நம்மை ஜெயிப்பதாவது என்று போட்டியாளர்கள் கவுரவப் பிரச்சனையாக கருதி கண்மூடித்தனமாக கார் ஓட்டியதால்தான் அஜித் பின்தங்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டது என்கிறார் அவரது பி.ஆர்.ஓ.

அஜித் ஒரு கார் வீரர் மட்டுமல்ல. கமர்ஷியல்  விமான ஓட்டி உரிமமும் பெற்றவர். திடீரென்று ஒரு ஆறுமாதம் விமானம் ஓட்டி விட்டு வருகிறேன்  என்று புறப்பட்டுப் போய் எல்லோரையும் ஆச்சர்யத்தில்  ஆழ்த்தினால் அதுதான் அசல் அஜித்!

Comments

Most Recent