அன்புமணிக்கு பிரபு பதில் கடிதம்

பிரபல நடிகர்கள் புகை பிடித்தால் மட்டும் சுற்றுச்சூழல் குறித்து அரசியல்வாதிகளுக்கு அக்கறை வந்துவிடும். இந்த இன்ஸ்ட‌ண்ட் அக்கறை அசல் படத்தை இரண்டு நாட்களாக அச்சுறுத்தி வருகிறது.

அசலில் அ‌ஜீத் சுருட்டு பிடிப்பது போல் காட்சிகள் வருகிறது. படத்தின் விளம்பரத்தில் இந்த சுருட்டு‌க் காட்சி இடம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி அசல் படத்துக்கு எதிராக தனது போராட்டத்தை தொடங்கினார்.

படத்தில் வரும் சுருட்டு‌க் காட்சி முக்கியமில்லை என்றால் படத்திலிருந்து அதனை எடுத்துவிடுங்கள் என்றும், முக்கியமான காட்சி எனில் புகைக்கு எதிரான எச்ச‌ரிக்கை படத்தில் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் அ‌ஜீத், சரண், பிரபு ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் மூலம் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதற்கு பிரபு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,

தணிக்கைக் குழுவால் அசல் உன்னிப்பாகப் பார்க்கப்பட்டு திரையிட‌த் தகுதியானது என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படம் தணிக்கைக்குப் போவதற்கு முன்பே படத்தின் ட்ரெய்ல‌ரிலும், படத்தின் தொடக்கத்திலும் புகைப் பிடிப்பது தீங்கானது என்ற அறிவிப்பை பதிவு செய்துள்ளோம்.

எங்கள் தந்தையின் வழியில் எப்போதும் இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வந்துள்ளோம். திரைப்படத் துறையின் நெருக்கடி நன்கு தெ‌ரிந்த நீங்கள் ஒரு பொறுப்பான இயக்கத்துக்கு தலைவராகவும் இருப்பதால் எந்த‌த் திரைப்படத்துக்கும் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்ளவும் என்று அந்த‌க் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அ‌ஜீத், சரண் ஆகியோர் சார்பாக இந்த‌க் கடிதத்தை எழுதியிருப்பதாகவும் அந்த‌க் கடிதத்தில் பிரபு தெ‌ரிவித்துள்ளார்.

Comments

Most Recent