பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறான பேச்சு: நடிகர்கள், நடிகை மீது வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி சென்னை: பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய ...
பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறான பேச்சு: நடிகர்கள், நடிகை மீது வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை: பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக நடிகர்கள், நடிகை மீது புதிய புகார் மனுவை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சினிமா கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி, விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகள் என்ற தலைப்பில் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது.
இது பெரும் கொதிப்பை திரையுலகில் ஏற்படுத்தியது. எனவே அந்தப் பத்திரிகை மீது கண்டனம் தெரிவிக்க நடிகர் நடிகைகள் ஒன்று சேர்ந்தனர். கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி மாலை நடிகர் சங்கத்தில் நடந்த இந்த கண்டனக் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது கண்டனம் தெரிவிப்பதாகக் கூறிக் கொண்டு ஒட்டு மொத்த பத்திரிகையாளரையும் ஈனப் பிறவிகள், பாஸ்டர்ட்ஸ் என்றெல்லாம் திட்டினர் சூர்யா, விவேக், சேரன் மற்றும் சத்யராஜ் ஆகிய நடிகர்கள்.
விவேக்கும், சத்யராஜூம் இன்னும் ஒருபடி மேலே போய், பத்திரிகையாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்துப் பெண்களுக்குக்கும் பிரா, ஜட்டியுடன் படம் போட்டு ஊரெல்லாம் தன் சொந்த செலவில் போஸ்டர் அடிப்பதாகத் தெரிவித்தனர்.
இதனால் பத்திரிகையாளர்கள் பெரும் மனக் கொதிப்புக்குள்ளாகினர். ஆபாசமாகப் பேசிய நடிகர்கள் மீது கடும் கண்டனம் தெரிவித்ததுடன், போலீசில் புகாரும் தெரிவித்தனர்.
ஆனால் இந்தப் புகார் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரம் நடிகர்கள் கொடுத்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட பத்திரிகையின் செய்தி ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டு, பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பத்திரிகையாளர்கள் புகார் கொடுத்ததை அறிந்ததும் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து பூச்செண்டு கொடுத்தனர். அந்த நடிகர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடிகர் நடிகைகள் பேசியதில் தவறில்லை என்று கருணாநிதியும் பின்னர் அறிக்கை விட்டார்.
அடுத்து நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களின் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சினிமா நடிகர்களின் ஆபாசப் பேச்சு குறித்த வீடியோ அளிக்கப்பட்டது. ஆனால் இப்படியொரு சம்பவமோ, கண்டனக் கூட்டமோ நடக்கவே இல்லை என போலீசார் சாதித்துவிட, வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது உயர்நீதிமன்றம்.
பெரும் அதிர்ச்சிக்குள்ளான பத்திரிகையாளர்கள். இந்த நிலையில் நடந்த உண்மைகளைக் குறிப்பிட்டு புதிய மனுவாக்கி சீராய்வுக்கு அனுப்பினார் எஸ் முருகானந்தம் என்ற பத்திரிகையாளர்.
அந்த மனுவில், "கடந்த 7.10.09 அன்று நடிகர், நடிகைகளின் கூட்டம் நடந்தது. அதில் அவர்களைப் பற்றி அவதூறான செய்தி வெளியிட்டதாக பேசினர். அந்தக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களை கடுமையாகச் சாடினர்.
அப்போது நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், விவேக், சத்யராஜ், சூர்யா, அருண்குமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் மிகவும் அவதூறாக பேசினர். அவதூறாக மட்டுமல்ல, பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்.
எனவே இவர்கள் மீது அவதூறு மற்றும் கொலை மிரட்டல் குற்றங்களுக்காக வழக்கு தொடரும் பொருட்டு சைதாப்பேட்டை 18-வது மாஜிஸ்திரேட்டிடம் மனு தாக்கல் செய்தேன். ஆனால் அந்த மனுவை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்துவிட்டார். எனது மனுவை தள்ளுபடி செய்வதற்கு அவர் எந்தக் காரணத்தையும் கூறவில்லை. மாறாக, அந்த பிரச்சினை பற்றி தனது சொந்த கருத்துகளை மட்டுமே அந்த உத்தரவில் மாஜிஸ்திரேட்டு குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த குற்றங்களை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களை தொகுத்து சி.டி. வடிவில் தயாரித்து தாக்கல் செய்திருந்தேன். அவர்களின் அவதூறான பேச்சை அதில் இணைத்திருந்தேன். ஆனால் நான் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என்பதை அவற்றை வைத்து ஆராயாமல், எனது மனுவை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்துவிட்டார்.
அந்த நடிகை மற்றும் நடிகர்கள் பேசும்போது, பத்திரிகையாளர்களுக்கு எதிராக பொதுவான, உள்நோக்கற்ற கருத்துகளை ஆவேசமாக பேசி இருக்கின்றனர் என்று தனது சொந்த கருத்தை காரணமாகக் குறிப்பிட்டுவிட்டு, எனது மனுவை விசாரணைக்கு ஏற்க மாஜிஸ்திரேட்டு மறுத்துவிட்டார். இது சரியான நீதி பரிபாலனம் ஆகாது. ஒட்டுமொத்த பத்திரிகை சமுதாயத்துக்கு எதிராக அவர்கள் குற்ற நோக்கத்தோடு பேசியுள்ளனர்.
இந்த பேச்சை அவர்கள் எதேச்சையாக பேசவில்லை. அவர்களைப் பற்றிய செய்தி வெளியானதும், நன்றாக திட்டமிட்டு, கண்டனக் கூட்டம் நடத்தி, அதில் கொலை மிரட்டல் விடுத்து பேசி இருக்கின்றனர். இது எப்படி உள்நோக்கம் இல்லாத பேச்சாக இருக்க முடியும்? எனது மற்றும் மற்றொரு பத்திரிகையாளரின் வாக்குமூலத்தை ஆய்வு செய்ய மாஜிஸ்திரேட்டு தவறிவிட்டார்.
நடிகர்கள், நடிகை மீது கூறப்பட்ட அவதூறு மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என்பதை, நான் கொடுத்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கவில்லை. அவர்கள் யாரையும் குறிப்பிட்டு குற்றம்சாட்டவில்லை என்றும் அவர்களை மோசமாக சித்தரித்தவர்கள் பற்றி பொதுவாக பேசிய பேச்சாகவே தெரிகிறது என்று மாஜிஸ்திரேட்டு குறிப்பிட்டு உள்ளார். இது நான் கொடுத்த ஆதாரங்களுக்கு முரணாக தீர்ப்பு.
எனவே, ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களையும் கேவலமாகப் பேசி மனதளவில் காயத்தை ஏற்படுத்திய இவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி மறுத்து மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்..." என்று கூறியிருந்தார்.
மீண்டும் வழக்கு தொடரலாம்...
இந்த மனுவை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில், "இந்த மனுவை மனுதாரர் திரும்பப் பெற்றதை அடுத்து, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. என்றாலும், நடிகர்கள், நடிகை மீது தனிப்பட்ட முறையில் புதிய புகார் மனு தாக்கல் செய்வதற்கு அவருக்கு சட்டப்பூர்வமாக எந்தத் தடையும் கிடையாது" என்று கூறப்பட்டுள்ளது
Comments
Post a Comment