Criminal case againt Singamuthu

நடிகர் சிங்கமுத்து தனது நோட்டீசுக்கு பதிலளிக்காததாலும் தன்னை பற்றி அவதூறாக..பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்ததாலும் சிங்கமுத்து மீது கிரிமினல் வழக்கை நடிகர் வடிவேலு தாக்கல் செய்தார். இதுபற்றிய விவரம் வருமாறு:_
நடிகர் வடிவேலு கடந்த மாதம் தன்னை நடிகர் சிங்கமுத்து நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்து விட்டதாகவும், கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார். இதுபற்றி வடிவேலுவும், சிங்கமுத்துவும் மாற்றி மாற்றி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தனர். இதனிடையே வடிவேல் அளித்த புகாரை அடுத்து சிங்கமுத்து ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.
வடிவேலு சிங்கமுத்துவுக்கு தனது பெயருக்கு களங்கம் விளைவித்து பேட்டி அளித்ததால் ரூ.25 கோடி நஷ்ட ஈடும், பகீரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என்றும், தவறினால் வழக்கு தொடருவேன் என்றும் பேட்டி அளித்தார். சிங்கமுத்துவும் பதிலுக்கு ரூ.25 கோடியே 50 லட்சம் தனக்கு வடிவேல் நஷ்டஈடு தரவேண்டும் என்றும், மீறினால் தான் வழக்கு தொடரப் போவதாக கூறினார்.
இதனிடையே நடிகர் வடிவேலு நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் சிங்கமுத்து மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். வடிவேல் சார்பில் அவரது வழக்கறிஞர் பால் கனகராஜ் சைதாப்பேட்டை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் திருமகள் முன்பு வழக்கு தாக்கல் செய்தார். அதில் நடிகர் சிங்கமுத்து வடிவேலை பற்றி அவதூறாக வார பத்திரிகையில் பேட்டியளித்திருந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் வடிவேல் படபிடிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி ரூ.25 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும், பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்காததால் பிரிவு 499, 500_ ன் கீழ் சிங்கமுத்து தண்டனைக்கு உரியவர் என்று அறிவிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்ட்ரேட் திருமகள் வழக்கை மார்ச் 3_ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று நடிகர் வடிவேலு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதுபற்றி நடிகர் வடிவேலு கூறியதாவது:_
நடிகர் சிங்கமுத்து என்னை மட்டுமல்ல, ஏராளமானோரை மோசடி செய்துள்ளார். கேட்டால் ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார். என் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார். இதனால் படப்பிடிப்பில் கவனம் செலுத்த முடியாத அளவு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சிங்கமுத்துவுக்கு தண்டனை வாங்கி கொடுக்காமல் ஓய மாட்டேன். தமிழக மக்களின் மகிழ்ச்சி ஒன்றே எனது எண்ணம். அதற்காக என் கவனத்தை நடிப்பில் செலுத்துவேன். இவ்வாறு நடிகர் வடிவேலு கூறினார்.

Comments

Most Recent