EVKS Elangovan open support to Rajini - Ajith

http://thatstamil.oneindia.in/img/2010/02/22-evks-elangovan200.jpg 

தாங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கருத்துக் கூற அனைவருக்கும் சுதந்திரமும் உரிமையும் உள்ளது. அப்படித்தான் ரஜினியும் அஜீத்தும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இதற்கு மிரட்டல் தெரிவிப்போர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர்-நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார். இதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

ஒட்டுமொத்த திரையுலகமும் ரஜினிக்கும் அஜீத்துக்கும் ரெட் கார்டு போடும் அளவுக்கு முயன்று பின்னர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அஜீத் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

இந் நிலையில் அஜீத், ரஜினி கருத்துகளுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

நடிகர் ரஜினிகாந்தும், அஜீத்தும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் சுதந்திரத்திற்கு யாரும் இடையூறாக இருக்கக் கூடாது. மேலும் அவர்களுடைய கருத்துகளில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

இதற்காக அவர்களை மிரட்டுவதோ, கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிடுவதோ சரியல்ல. தமிழகத்தில் நடமாட முடியாது என்று பயமுறுத்துவதும், தமிழர்களுக்கு எதிரானவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதும் கூடாது. மலிவான அரசியல் உத்தியும் கூட.

கருத்து சுதந்திரத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதா தமிழ் கலாசாரம்? ரஜினி, அஜீத்துக்கு எதிராக மிரட்டல் மற்றும் வன்முறையில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.

Comments

Most Recent