Last Updated : தே ர்வுகள் நெருங்கும் நேரத்தில் தொலைக்காட்சி இணைப்பைத் துண்டிப்பதும், தொலைக்க...
தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் தொலைக்காட்சி இணைப்பைத் துண்டிப்பதும், தொலைக்காட்சிப் பக்கமே திரும்பக்கூடாது என்று கண்டிப்பதுமே பெற்றோரின் வழக்கம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால்,தேர்வுக்காக மாணவர்கள் தங்களைத் தயார் செய்துகொள்ள, தொலைக்காட்சிச் சானல்களும் உதவுகின்றன என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. ஆரவாரங்களுடன் ஆபாசத்தை அள்ளித் தெளித்து இளம் உள்ளங்களில் நஞ்சைப் புகுத்தும் சானல்களுக்கு மத்தியில், பொதிகை போன்ற சமுதாயப் பொறுப்பு மிக்க சானல்கள் சத்தமில்லாமல் செய்து வரும் இந்த மகத்தான பணி குறித்து அனைவரும் அறியவேண்டியது அவசியமல்லவா?
காலை 5 மணிக்கு பொதிகையில் ஒளிபரப்பாகும் மாதிரி வினாத்தாள் நிகழ்ச்சி பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக அமையும். ஒவ்வொரு பாடப் பிரிவிலும், பொதுத் தேர்விற்கான மாதிரி வினாத்தாளை விளக்குகின்றனர் ஆசிரியர்கள். வினாத்தாளின் வடிவம், மாதிரி வினாக்கள், விடையளிக்கும் முறை என அவர்கள் விளக்கும் விதத்தைப் பார்க்கும்போது நமக்கே மீண்டும் தேர்வு எழுதும் ஆசை எழுகிறது. அந்த அளவிற்கு எளிதாகவும், அனைவருக்கும் புரியும் விதத்திலும் விளக்குகின்றனர் (ஆசிரியர்கள் அல்லவா...)
பொதிகையில் மட்டுமல்ல, திருச்சி, மதுரை, கோவை போன்ற ஊர்களில் உள்ள உள்ளூர் சானல்களிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன என்பதை அறியும்போது மனதின் ஓரத்தில், ஊடகங்களைப் பற்றி லேசாக ஒரு நம்பிக்கைக் கீற்றும் தோன்றுகிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியும் ரசிக்கும்படியாக இருக்கிறது. எதிர்கால இயக்குனர்களாக விரும்புபவர்கள் எடுத்த குறும்படங்களைத் திரையிட்டு (சின்னத்திரையில்தான்), ஆரோக்கியமான விதத்தில் அவற்றை விமர்சிப்பது பாராட்டுக்குரியது. திறமைகள் இருந்தும், திரையுலகில் படவேண்டியவர்களின் பார்வைகளில் படாததால், வெளிச்சத்துக்கு வராமலே போகும் எத்தனையோ திறமைசாலிகளுக்கு இந்நிகழ்ச்சி ஒரு வரப்பிரசாதம். கலைஞர் தொலைக்காட்சி, "மானாட, மயிலாட' போன்ற அபத்தங்களுக்கு இடையே "நாளைய இயக்குனர்' போன்ற நல்ல நிகழ்ச்சிகளையும் அளிப்பது சற்றே ஆறுதல் தருகின்றது.
வெள்ளிக்கிழமை காலை மக்கள் தொலைக்காட்சியின் "தமிழ்ப்பண்ணை' நிகழ்ச்சியைப் பார்த்தபோது நமக்குச் சில சந்தேகங்கள் எழுந்தன. ஓர் உதாரணத்தைக் கையாண்டபோது தர்ணா என்ற, "பிற'சொல்லைப் புகுத்தியிருப்பதாகச் சொன்னார் பேராசிரியர் நன்னன். பிற சொல் என்பதை விட, அயற்சொல் என்பது பொருத்தமாக இருந்திருக்காதா? அதேபோல், அவர் தனது பேச்சினூடே, "ஒரு அமைச்சர்' என்று குறிப்பிட்டதும் சற்றே நெருடியது. "ஆட்டோவில் அடிபட்டவன் சாவு' என்பது தவறு என்றும் "ஆட்டோவால் அடிபட்டவன் சாவு' என்பதே சரியென்றும் மற்றொரு கருத்தை முன்வைத்தார் நன்னனார். அதுவும் ஒரு சர்ச்சைக்கு வழிவகுக்கின்றதே, ஐயா! ஆட்டோவால் அடிபட்டவனா? அல்லது அடிக்கப்பட்டவனா? "ஆட்டோவின் அடி(யில்) பட்டவன்' என்ற பொருளில் வரும்போது, "இல்' அல்லது "ஆல்' எங்கிருந்து வரமுடியும்? இது போன்ற எண்ணற்ற ஐயங்கள் எழுகின்றனவே! இவற்றுக்கான விளக்கத்தைக் கோபம் கொள்ளாது அளித்தால் நன்னனாருக்கு நன்றி நவிலக் கடமைப்பட்டுள்ளோம்.
அதே நாளில், மக்கள் தொலைக்காட்சியின் மற்றொரு நிகழ்ச்சியான "கேள்விக்கு என்ன பதில்?' நிகழ்ச்சியில், "தேசிய உயர்கல்வி ஆணையம் மாநில உரிமைகளுக்கு எதிரானதா?' என்பது பற்றிய விவாதம் இடம்பெற்றது. தேர்தல் ஆணையத்தைப் போலவே இந்த ஆணையமும் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே கட்டுப்படும் வகையில் தனி அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும் என்பதால் மாநில உரிமைகள் பறிபோய்விடும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. அப்படியானால் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்தும் அரசியல்வாதிகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்கிறார்களா? நினைத்தாலே நடுங்குகிறதே? (தொகுப்பாளரே! கல்வியைக் கள்வி என்றீர்களானால் அதனைக் கேட்கும் தமிழ் ஆர்வலர்களின் செவிகள் சிவக்கக்கூடும் என்பது உமக்குத் தெரியாதா?)
கல்வி வியாபாரமாகிவிட்டது என்றும், அரசியல்வாதிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் கல்வி நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள் என்றும் குறிப்பிட்டு ஏதோ கூற வந்தார் பங்கேற்பாளர்களில் ஒருவர். உடனடியாக அவரது பேச்சில் குறுக்கிட்டு விவாதத்தை மிகவும் சாமர்த்தியமாக வேறு திசைக்குக் கொண்டு சென்றார் தொகுப்பாளர். அரசியல்வாதிகளின் கல்வி நிறுவனங்களைப் பற்றிப் பேச அவ்வளவு அச்சமா? நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு முறைகேடுகள் (ஊழல்) நடப்பதாக ஒரு கருத்தை அனைவரும் பதிவு செய்தனர். பின்னர் தொலைபேசியில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் தனது கருத்தை அவ்வாறே பதிவு செய்தார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், தற்போது வரம்பு மீறாமல் இருக்கும் ஊழல், மத்திய அரசிடம் அதிகாரம் சென்றால் கட்டுமீறிவிடுமாம். ஊழல் செய்வது குற்றம் என்றுதான் நாம் நினைத்திருந்தோம். ஆனால் ஊழலுக்கு வரம்பு இருக்கிறதென்பதோ, வரம்பு மீறா ஊழல் ஏற்புடையது என்பதோ இன்றுவரை நமக்குத் தெரியாமல் போய்விட்டது. ஊழலின் வரம்பு என்ன என்பதையும், அதற்கு எப்போது, யார் வரம்பு விதித்தார்கள் என்பதையும் யாராவது எடுத்துச் சொன்னால், அது நமது நடைமுறை அறிவைப் பெருக்கிக்கொள்ள உதவியாக இருக்கும். ஊழல் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதும் அதை வரம்பு மீறாமல் பார்த்துக்கொள்வதற்காகப் போராடுவதும்.... வாழ்க ஜனநாயகம்...!
Comments
Post a Comment