சிங்கமுத்து செஞ்ச மோசடியை நினைச்சா நடிப்பே மறந்து போகுதுண்ணே...! - வடிவேலுவின் புலம்பல் நடிப்பில் காமெடியனாக இருந்தாலும், தொடர்ந்து வில...
சிங்கமுத்து செஞ்ச மோசடியை நினைச்சா நடிப்பே மறந்து போகுதுண்ணே...! - வடிவேலுவின் புலம்பல்
நடிப்பில் காமெடியனாக இருந்தாலும், தொடர்ந்து வில்லத்தனமாக அறிக்கை கொடுத்து வந்த சிங்கமுத்து மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் மோசடி, அவதூறு மற்றும் கொலை மிரட்டல் வழக்குத் தொடர்ந்தார் வடிவேலு.
வடிவேலுவின் படங்களில் தொடர்ந்து காமெடியனாக இடம் பிடித்தவர் சிங்கமுத்து. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இவருக்கு வடிவேலு தன் படங்களில் வாய்ப்பு பெற்றுத் தந்தார்.
இதனால் இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாகத் தொடர்ந்தனர். அந்த நட்பின் காரணமாக வடிவேலுவுக்கு நிலங்கள் வாங்கித் தர ஆரம்பித்தார் சிங்கமுத்து. இதற்கு ஒரு புரோக்கரும் உதவினாராம். கடைசியில் பார்த்தால் சிங்கமுத்து வாங்கிக் கொடுத்தவற்றில் ரூ 7 கோடி மதிப்பிலான நிலங்கள் புறம்போக்கு மற்றும் சுடுகாட்டு நிலம் என்பது தெரிய வந்து அதிர்ந்து போனார் வடிவேலு.
இதுபற்றி ஆரம்பத்தில் வெளியில் சொல்லாமல் இருந்தவர், பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சொன்னாராம். அவர்கள் இதை சட்டப்படி அணுகுமாறு வடிவேலுவுக்கு ஆலோசனை கூர, உடனடியாக சிங்கமுத்து மீது போலீசில் புகார் தெரிவித்தார். மேலும் தனது புகார்களுக்கு ஆதாரமாக பத்திரங்களையும் மாநகர காவல்துறை ஆணையரிடம் கொடுத்தார் வடிவேலு.
விவரமறிந்த சிங்கமுத்து உடனே தலைமறைவானார். ஆனால் வடிவேலு மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்தார். வடிவேலு மேனேஜர் இறந்தது, வடிவேலுவின் படப்பை வீட்டில் ஒரு பெண் இறந்து கிடந்தது என பல குற்றங்களில் வடிவேலுவுக்கு நேரடி தொடர்பு உண்டு என குற்றம் சாட்டினார். ஆனால் இந்த வழக்குகளுக்கும் வடிவேலுவுக்கும் சம்பந்தமில்லை என போலீசாரே கூறிவிட்டனர். எனவே தன் மீது இல்லாத பழியை வேண்டுமென்றே சுமத்திய சிங்கமுத்துவிடம் ரூ 25 கோடி மான நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் வடிவேலு. ஆனால் சிங்கமுத்துவோ பதிலுக்கு ரூ 25 கோடியே 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பினார்.
இப்படி பரபரப்பு புகார்களைக் கூறிய சிங்கமுத்து தொடர்ந்து தலைமறைவாக இருந்தபடியே பவர்புல் மனிதர்கள் சிலரது உதவியுடன், முன்ஜாமீன் பெற்றார். ஆனால் அந்த முன்ஜாமீனுக்காக ஒப்புக் கொண்ட நிபந்தனைகளின்படி அவர் நடக்கவில்லை. எனவே அவரது ஜாமீன் ரத்தாக உள்ளது.
இந்த நிலையில், உரிய ஆதாரங்களுடன் வடிவேலு புகார் கொடுத்தும் போலீசாரால் சிங்கமுத்துவை கைது செய்ய முடியவில்லை. எனவே வடிவேலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிங்கமுத்து மீது இன்று முறைப்படி வழக்கு தொடர்ந்தார். தனது வழக்கறிஞர் பால் கனகராஜூடன் அவர் இன்று கோர்ட்டுக்கு வந்தார்.
பெரும் பணம் மோசடி, அரசு நிலத்தை விற்று ஏமாற்றியது, கொலைமிரட்டல், அபாண்டமாகப் பழிபோட்டதற்காக அவதூறு வழக்கு என பல பிரிவுகளில் சிங்கமுத்து மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் வடிவேலு.
வழக்கப் பதிவு செய்து விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி திருமகள், அடுத்த மாதம் 3-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார். சிங்கமுத்துவுக்கு கோர்ட் நோட்டீஸும் அனுப்ப உத்தரவிட்டார்.
நடிக்கக் கூட முடியல...
பின்னர் கோர்ட் வளாகத்தில் நிருபர்களிடம் வடிவேலு கூறியதாவது:
"சிங்கமுத்து எனக்கு சொத்து வாங்கி கொடுத்ததில் மோசடி செய்தது பற்றி அவரிடம் கேட்டதற்கு ரவுடிகளை வைத்து மிரட்டினார்.
தற்போது என்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறி மனவேதனையை ஏற்படுத்துகிறார். அவர் செஞ்ச மோசடியை நினைச்சா என்னால் என் நடிப்பு தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. நடிப்பே மறந்து போகுதுண்ணே... இருந்தாலும் தொழிலில் நான் தோற்று போக மாட்டேன்.
என்னை போல மேலும் சிலரையும் சிங்கமுத்து ஏமாற்றி இருக்கிறார். எனவே அவருக்கு சட்ட ரீதியாக தண்டனை வாங்கி கொடுக்கும்வரை ஓய மாட்டேன்.
நான் ஏற்கனவே போலீசில் கொடுத்த புகார் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது," என்றார்.
வடிவேலுவின் வக்கீல் பால். கனகராஜ் கூறும்போது, வடிவேலு மீது சிங்கமுத்து அவதூறாக பேசியதற்காக இப்போது அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். அடுத்து ரூ.25 கோடி நஷ்டஈடு கேட்டு வேறு ஒரு வழக்கு தொடர உள்ளோம் என்றார்.
வழக்கைச் சந்திப்பேன்!-சிங்கமுத்துவின் வழக்கறிஞர்:
இதறிகிடையே வடிவேலுவின் வழக்கைச் சந்திப்பேன் என்று சிங்கமுத்து சார்பில் அவரது வழக்கறிஞர் அறிவழகன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "நடிகர் வடிவேலுதான் முதன்முதலாக எனது கட்சிக்காரர் பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். சுடுகாட்டு நிலத்தில் ஏமாற்றிய கூட்டாளி என்று பேட்டி கொடுத்தார். இது தான் தவறான பிரசாரம் ஆகும்.
வடிவேலுவின் இந்த குற்றச்சாட்டால் சிங்கமுத்து மன உளைச்சலும், வேதனை யும் அடைந்தார். இதற்கு சிங்கமுத்து பதில் கொடுத்தாரே தவிர எந்த அவதூறான குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை.
வடிவேலுவின் புகழுக்கு களங்கம் விளைவிப்பது போல் எதுவும் பேசவில்லை. எனவே இந்த அவதூறு வழக்கை சட்டப்படி சந்தித்து எங்கள் பக்கம் நியாயம் இருப்பதை நிரூபிப்போம்..." என்றார்.
Comments
Post a Comment