CM Karunanidhi's comment on Swami Nithyanandha and Media


சென்னை, மார்ச்.4: சமீபத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சாமியார்களின் ஏமாற்று வித்தைகளைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாமர மக்களின் வாழ்வையும், அறிவையும் பாழாக்கி பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட பல ஆண்டு காலமாக பிரச்சாரம் செய்துவந்தும் இன்னமும் திருந்திக் கொள்ளாதோர் இருக்கின்றனர்.

இதுபோன்ற சாமியார்களின் ஏமாற்றுவித்தைகளை பொறுத்துக்கொள்ள முடியாது. அதேநேரத்தில் அந்தச் சம்பவங்கள் எங்கே, எப்போது நடைபெற்றது என்பதைக் காட்ட வெளியிடப்படுகின்ற படங்கள், செய்திகள் அளவுக்கு மீறும்போது அதை தொலைக்காட்சியிலோ, பத்திரிகையிலோ பார்க்கும் இளைய சமுதாயத்தினரிடையே எத்தகைய மாறுதல்களை ஏற்படும் என்பதையும் அது அவர்களை எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்பதையும் அக்கறை கொண்டோர் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு தீமையை விவரிப்பதன் மூலம் மற்றொரு பெரிய தீமைக்கு வித்திடுவதாக ஆகக்கூடாது.

அண்மையில் வெளிவந்த செய்திகள், தொடர்ந்து வெளிவரும் செய்திகளை விவரம் உணர்ந்தோர் அரசுக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டுமேயல்லாமல், தாங்களே முன்னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது.முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் போதையேற்றும் கள்ளை அருந்தியவனை மேலும் கள்ளையூற்றி திருத்த முடியுமா? அதுபோலத்தான் இந்தச் செய்திகளும் படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்து விடக்கூடாது.இதுபோன்ற ஏமாற்றுவித்தைக்காரர்களையும், பாமர மக்களை படுகுழியில் தள்ளும் பகல் வேடக்காரர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்க்காது. இந்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments

Most Recent