Commotion at Devi theatre complex following fire

http://thatstamil.oneindia.in/img/2010/03/28-devi-200.jpg
சென்னை: தேவி திரையரங்க வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

முண்டியடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றதில் அவர்களின் உடைமைகளை விட்டு விட்டு ஓடினர்.

தேவி திரையரங்க வளாகத்தில் மின் உராய்வு காரணமாக இரவு 9.15 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த வளாகத்திலிருந்த நான்கு திரையரங்குகளிலும் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன.இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வெளியில் திடீரென புகை எழுந்ததை எதேச்சையாகப் பார்த்த சிலர் அலறியடித்தபடி வெளியேறியுள்ளனர். ஆனால் முன்னெச்சரிக்கையாக தியேட்டர் நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எச்சரிக்கை விளக்குகளும் போடப்படவில்லை.

உடனே, மற்ற ரசிகர்களும் படம் ஓடிக்கொண்டிருந்தபோதே, கதவுகளைத் திறந்து கொண்டு வெளியேற முயன்றனர். படி வழி மிகக் குறுகலாக இருந்ததாலும், லிப்ட்டில் போதிய இடம் இல்லாததாலும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. யாருக்கும் பெரிதாகக் காயம் ஏற்படவில்லை. ஆனால் சிலருக்கு லேசான சிராய்ப்பு மட்டும் ஏற்பட்டது.

வெளியில் வந்த ரசிகர்கள், தியேட்டர் ஊழியர்களுடன் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய நேரத்தில் தகவல் தராதது ஏன் என்ற ரசிகர்களின் கேள்விக்கு எந்த பதிலையும் நிர்வாகம் தரவில்லை.

தியேட்டரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சுத்தமாக இல்லை என்று குற்றம்சாட்டினர்.

Comments

Most Recent