'Hurt Locker' bags 6 Oscars



லாஸ் ஏஞ்சலீஸ் : சர்வதேச அளவில் திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. 82-வது விருது விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்பட 24 பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த படம் ஹர்ட் லாக்கர்

சிறந்த படத்துக்கான விருதை பெண் இயக்குநர் கேத்ரீன் பிக்லோ (58) இயக்கிய ஹர்ட் லாக்கர் என்ற படம் தட்டிச் சென்றது. சிறந்த இயக்குநருக்கான விருதை கேத்ரீன் பெற்றுள்ளார். இதன் மூலம் ஆஸ்கர் விருது வரலாற்றிலேயே சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெறும் முதல் பெண் இயக்குநர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த திரைக்கதை வசனம் உள்பட மொத்தம் 6 விருதுகள் ஹர்ட் லாக்கர் படத்துக்கு கிடைத்துள்ளன. இந்த ஆண்டு ஹர்ட் லாக்கர் படமே அதிகபட்சமான விருதுகளை பெற்றுள்ளது.

இப்படத்தில் சிறந்த எடிட்டிங்குக்கான விருது பாப் முராவ்ஸ்கி, கிரஸ் இன்சிஸ் ஆகியோருக்கும், சவுண்ட் எடிட்டிங் மற்றும் சவுண்ட் மிக்ஸிங்குக்கான விருது பால் என்.ஜே. ஓட்டோசன், ரே பெக்கெட் ஆகியோருக்கும், சிறந்த திரைக்கதைக்கான விருது மார்க் போலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அவதாருக்கு 3 விருது

அவதார் படம் 3 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த கலை இயக்கம், ஒளிப்பதிவு, விஷுவல் எஃபெக்ட் ஆகிய மூன்று பிரிவுகளுக்கு விருது கிடைத்துள்ளது. சிறந்த கலை இயக்கத்துக்கான விருதை ரிக் கார்ட்டர், ராபர்ட் ஸ்ட்ராம்பெர்க், கிம் சின்கிலேயர் ஆகிய மூவரும் இணைந்து பெற்றுள்ளனர். சிறந்த ஒளிப்பதிவுக்காக மெüரோ ஃபியோருக்கும், விஷுவல் எஃபெக்ட்டுக்காக ஜோய் லெட்டரி, ஸ்டீபன் ரோசென்பம், ஆன்ட்ரீவ் ஆர்.ஜோன்ஸ், ரிச்சர்டு பேனெஹம் ஆகியோரும் இணைந்து பெற்றுள்ளனர்.

சிறந்த நடிகர் ஜெஃப் பிரிட்ஜெஸ்

கிரேஸி ஹார்ட் படத்தில் நடித்த ஜெஃப் பிரிட்ஜெஸ் (60) சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். முன்னதாக, இவரது பெயர் 4 தடவை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 4 தடவையும் விருது கிடைக்கவில்லை. விருதை பெற்றுக்கொண்ட அவர், இந்த விருதை எனது தாய்க்கும், தந்தைக்கும் அர்ப்பணிக்கிறேன் என்று கூறி, விருது வழங்கும் அரங்கில் குழுமியிருந்தவர்களை நெகிழவைத்துவிட்டார்.

கிரேஸி ஹார்ட் படம் சிறந்த பாடல் இசைக்கான விருதை பெற்றுள்ளது. இந்த விருதை ரியான் பிங்கோம், டி போன் பர்னெட் ஆகியோர் இணைந்து பெற்றுள்ளனர்.

இந்திய படத்துக்கு விருது இல்லை:

கடந்த ஆண்டு ஸ்லம் டாக் மில்லினர் படத்துக்கு இசையமைத்த தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், அப்படத்தின் சவுண்ட் என்ஜீனியர் ரசூல் பூக்குட்டிக்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு எந்த ஒரு இந்திய படத்துக்கோ, இந்தியருக்கோ விருது கிடைக்கவில்லை.

சிறந்த நடிகை சான்ட்ரா புல்லாக்

தி பிளைண்ட் சைட் என்ற படத்தில் நடித்த சான்ட்ரா புல்லாக்குக்கு (45) சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. விருதை பெற்றுக்கொண்ட சான்ட்ரா, சிறந்த நடிகைக்கான விருது எனக்குதான் கிடைத்துள்ளதா? என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பி, விருது விழா அரங்கில் சிரிப்பலையை எழுப்பினார்.

சிறந்த துணை நடிகர், நடிகை:

இங்லூரியஸ் பேஸ்டெர்ட்ஸ் படத்தில் நடித்த கிறிஸ்டோப் வால்ட்ஸ் சிறந்த துணை நடிகர் விருதையும், பிரீசியஸ் படத்தில் நடித்த மோ நிகியூ சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளனர்.

சிறந்த பின்னணி இசை:

அப் என்ற படத்துக்கு இசையமைத்த மைக்கேல் கியாசினோ சிறந்த பின்னணி இசைக்கான விருதை பெற்றுள்ளார்.

சிறந்த முழுநீள ஆவணப்படம்:

தி கோவ் என்ற முழுநீள ஆவணப்படத்துக்கு சிறந்த முழுநீள ஆவணப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த குறும்படம்: மியூசிக் பை புரூடென்ஸ் குறும்படத்துக்கு சிறந்த குறும்படத்துக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது.

சிறந்த வெளிநாட்டு படம்:

சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதை, ஆர்ஜென்டினாவின் தி சீக்ரெட் இன் தேர் ஐஸ் படம் பெற்றுள்ளது.

சிறந்த மேக்-அப், ஆடை வடிவமைப்பு:

ஸ்டார் டெக் படத்துக்கான மேக்-அப் கலைஞர்கள் ஜோயல் ஹர்லோ, மின்டிஹால், பர்னே பர்மன் ஆகியோர் சிறந்த மேக்-அப் கலைஞர்களுக்கான விருதை பெற்றுள்ளனர். தி யெங் விக்டோரியா படத்தின் ஆடைவடிமைப்பு கலைஞர் சான்டி பாவலுக்கு சிறந்த ஆடை வடிவமைப்பு கலைஞருக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த அனிமேஷன் படம், அனிமேஷன் குறும்படம்:

சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது அப் என்ற படத்துக்கும், சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருது லோகோரமா என்ற அனிமேஷன் குறும்படத்துக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தழுவல் திரைக்கதை:

பிரீசியஸ் படத்துக்கு சிறந்த நாவலைத் தழுவிய திரைக்கதைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சபைர் எழுதிய புஷ் என்ற நாவலைத் தழுவி இந்த படத்தில் திரைக்கதை எழுதப்பட்டது.

Comments

Most Recent