Shankar apologizes to a Journalist

 http://thatstamil.oneindia.in/img/2010/03/17-shankar-aish200.jpg

ரெட்டச் சுழி ஆடியோ விழாவில் தனது உதவியாளரால் பலமாகத் தாக்கப்பட்ட முன்னணி ஆங்கில நாளிதழ் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கோரினார் இயக்குனர் ஷங்கர்.

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற ரெட்டச் சுழி ஆடியோ வெளியீட்டு விழாவில் எக்கச்சக்க கூட்டம் குவிந்ததால், பெரும் இட நெருக்கடி ஏற்பட்டது. அப்போது பத்திரிகையாளர்களுக்குள்ளும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

உடனே அங்கு வந்த இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் உதயா என்பவர் எல்லோரையும் வேகமாகத் தள்ளினார். இதில் பத்திரிகையாளர் ஒருவர் கீழே விழுந்துவிட்டார்.

இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. அந்த பத்திரிகையாளருடன் வந்திருந்த புகைப்படக்காரரின் கேமரா லென்ஸ் மற்றும் ஃபில்டர் உடைந்து சேதமாகியது.

இதனால் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்கள் சிலர் (பெரும்பாலானோர் ஐஸ்வர்யாவை படமெடுப்பதில் பிஸியாக இருந்ததால் அடிபட்ட பத்திரிகையாளரைக் கண்டு கொள்ளவில்லை!) சம்பந்தப்பட்ட நபரை வரவழைக்குமாறு விழா ஏற்பாட்டாளர்களை வற்புறுத்தினர்.

ஆனால், விழா முடிந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம் என போலீசார் தலையிட்டு கூறவே அமைதி காத்து ரத்தம் வழிந்ததையும் பொருட்படுத்தாமல் கடும் வலியுடன் நின்றார் அந்த பத்திரிகையாளர்.

ஆனால் உதயா தப்பி ஓடிவிட்டது பின்னர்தான் தெரியவந்தது. அதற்குள் விழா முடிந்துவிட்டது. மேடையிலிருந்து இறங்கி வந்த ஷங்கரிடம் விஷயத்தைக் கூறினர். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஷங்கர்.

அப்போது காயம்பட்ட இடத்தைக் காட்டினார் அந்த நிருபர். காயத்தின் தீவிரத்தைப் பார்த்துப் பதறிய ஷங்கர், மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன், இதற்குக் காரணமான நபர் மீது நீங்கள் சொல்லும் நடவடிக்கையை எடுக்கத் தயாராக இருக்கிறேன்.. என்றார்.

இந்த பதிலில் திருப்தியடையாத அந்த நிருபர் அங்கிருந்து வெளியேறினார்.

Comments

Most Recent