Special Report : 'Non-Functioning' Censor Board

Dysfunctional censor board : exclusive report
தமிழ் சினிமாவின் தற்போதைய கதாபாத்திரங்கள், அரிவாளை கையில் தூக்கியே அலைகின்றன. "ரொமான்டிக்' காட்சியிலும் கூட, காதலி கழுத்தை கத்தி நுனியால் வருடும் அளவுக்கு, அந்தப் பாத்திரங்கள் வெறியோடு திரிகின்றன. இவர்களின் இந்த ரத்த வேட்கைக்கு எந்த ஓர் உயரிய காரணமும் இருப்பதில்லை. அராஜகத்துக்கு நியாயம் கற்பிக்க முயல்வது அபத்தம்தான். என்ன செய்ய, இப்போதைய கதாபாத்திரங்கள் பலவும் வெட்டிப்பயல்களை சுற்றியே அல்லவா எழுப்பப்படுகிறது!

பருத்திவீரனில் தொடங்கி மாத்தியோசி வரைக்கும் எத்தனையோ கிராம பின்னணியுடனான படங்கள் வெளியாகி சில படங்கள் ‌வெற்றியையும், சில படங்கள் தோல்வியையும் தழுவியுள்ளன. கதாநாயகனை வன்முறையாளனாக காட்டி விட்டு, க்ளைமாக்ஸில் அவன் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி திருந்துவது போலவும், இது மாதிரி‌யெல்லாம் செய்யக்கூடாது என மெசேஜ் சொல்லி படத்தை முடித்து விடுகிறார்கள். இதுபோன்ற சினிமாக்களால் இளம் சமுதாயமே சீரழிந்து கொண்டிருக்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம்... மதுரையில் ரேனிகுண்டா படப்பாணியில் இளைஞர்கள் 5 பேர் சேர்ந்து செய்த கொலையை சொல்லலாம்.

இந்த கொ‌டூரம் ஒருபுறம் என்றால்.... இதற்கு மற்றாக தற்போது இன்னொரு அசிங்கம் அரங்கேறத் துவங்கி உள்ளது. அது, ஆபாசம். ஓரின சேர்க்கையாளர்களின் ஆசாபாசங்களையும் அவர்களுக்குள் இருக்கும் அதீத காதலையும் சொல்லும் வகையிலும், தன்னை விட வயது மூத்த பெண்கள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் கதைகள் பின்னப்பட்டு வருகின்றன. படத்தின் தலைப்புக்கும் கதைக்குமான சம்பந்தமே குதிரைக்கும் கொம்புக்குமான உறவாக இருக்கும் நிலையில், படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பை வைத்து எந்தப் படத்தின் கதையையும் முன்கூட்டியே யூகிப்பது எளிதான விஷயமல்ல.

பொது விழாவுக்கு கூட டூ பீஸ் உடையில் வந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் நடிகைகளுக்கும், நடிகைகளை பாதுகாக்கி‌றேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்று பேசும் நடிகர்களுக்கும் இதுபோன்ற ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகளால் எந்த பாதி்ப்பும் இல்லை. ஆனால் முழுமையாக பாதிக்கப்படுவது அவர்கள் வைத்த விலைக்கு டிக்கெட் எடுத்து தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் பாமர மக்கள்தான்.

இதுபோன்ற மோசமான படங்களை அடையாளப்படுத்த ஓரளவுக்கேனும் உதவுவது சென்சாரின் சான்றிதழ்தான். காட்சிகளைப் பொறுத்து, யு அல்லது யு/ஏ அல்லது ஏ என சான்றிதழை ஒரு வட்டத்துக்குள் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், படத்தின் விளம்பரங்களில் இதை பெரும்பாலான படங்கள் போடுவதில்லை.

ஒரு சில படங்கள் சென்சார் சான்றிதழை குறிப்பிட்டிருந்தாலும், அதைக் கண்டுபிடிக்க தனி சாமர்த்தியம் வேண்டும். வரும் ஆனா வராது என்பதைப் போல, இருக்கும் ஆனா தெரியாது என்ற கணக்கிலேயே அது சுட்டப்பட்டிருக்கும். இதில் உள்ள குறைபாட்டைக் களைந்தால்தான், சென்சார் போர்டின் செயல்பாட்டுக்கு ஓர் அர்த்தம் பிறக்கும்.

Comments

Most Recent