மூத்த நடிகை காஞ்சனா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் சந்தித்து பேசினார். 1960 மற்றும் 70களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாந...
மூத்த நடிகை காஞ்சனா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் சந்தித்து பேசினார். 1960 மற்றும் 70களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை காஞ்சனா சொத்துக்களை உறவினர்கள் ஏமாற்றி பிடுங்கி விட்டனர். அவர் தற்போது பெங்களூரில் சகோதரி வீட்டில் வசிக்கிறார். காஞ்சனா சாப்பாட்டுக்கு வழியின்றி கோவில் பிரசாதத்தை சாப்பிடுவதாக செய்திகள் வந்தன. ஆனால் அதனை நடிகை காஞ்சனா மறுத்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் சாப்பாட்டுக்கு வழியின்றி கஷ்டப்படுவதாகவும் கிழிந்த புடவையுடன் கோவில் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்வை நகர்த்துவதாகவும் என்னைப் பற்றி வெளியான உன்மைக்கு மாறான செய்திகள் எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. கோவிலுக்கு போகும்போது சாதாரண காட்டன் புடவையுடன் போவதில் என்ன தவறு? அதை கிழிந்த புடவை என்று கூறியிருப்பது அப்பட்டமான பொய். கோவிலுக்குப் போகிற யாரும் அங்கு தரப்படும் பிரசாதத்தை பக்தியுடன் வாங்கிச் சாப்பிடுவதுண்டு. அப்படி நான் வாங்கிச் சாப்பிட்டதாலேயே அதுதான் என் சாப்பாடு என்று அர்த்தமா? பெங்களூரில் என் சகோதரி வீட்டில் வசிக்கிறேன். வீதியில் நானே காய்கறி வாங்கினேன். என்பதால் எப்படி துயரமான நிலையாகும்? பெரிய இடத்துப் பெண்மணிகள் அவர்களே கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்குவதில்லையா? காய்கறி கடைக்கு பர்சில் இருந்து சில்லரை எடுத்து கொடுத்தால் கையில் வேறு ரூபாய் இல்லை என்ற அர்த்தமா? எனக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகளை எல்லாம் நீங்கி, பெங்களூரில் நான் சொந்த பிளாட்டில் வசித்து வருகிறேன். என் சகோதரிக்குத் தனியாக சொந்த வீடு உள்ளது. நான் பரிதாப நிலையில் இல்லை என்பது ஆணித்தரமாகக் கூறி கொள்கிறேன். யாரும் பரிதாபப்படுகிற நிலையில் நான் இல்லை, என்பதை ரசிகர்களுக்கு நன்றியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை போயஸ் தோட்டம் இல்லத்தில் நடிகை காஞ்சனா சந்தித்து பேசினார். இதுபற்றி அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் இல்லத்தில், பழம் பெரும் திரைப்பட நடிகை காஞ்சனா மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, கர்நாடக இசைக் கலைஞர்கள் ஆஷா ஜெகதீஷ், ஜோதி மஞ்சுநாத்தும் உடனிருந்தனர், என்று கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment