மதராஸபட்டணம் படத்தின் பாடல் வெளியீட்டை, பழைய மெட்ராஸ் போலவே அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் வைத்து வெளியிட்டார் கமல்ஹாஸன். மிகவும் வித்...
மதராஸபட்டணம் படத்தின் பாடல் வெளியீட்டை, பழைய மெட்ராஸ் போலவே அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் வைத்து வெளியிட்டார் கமல்ஹாஸன்.
மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட இந்த விழா மேடையில் பழைய நீராவி எஞ்சின் ரயிலில் வந்து கமல் இறங்க, பார்வையாளர்கள் அதிசயத்துடன் பார்த்தனர்.
நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இந்த விழா நடந்தது.
கல்பாத்தி அகோரம் தயாரிக்க விஜய் டைரக்டு செய்ய ஆரியா-எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ள புதிய படம் மதராஸபட்டிணம். இது, 1945-ல் நடைபெறும் கதை.
இந்த விழாவுக்காக, வர்த்தக மையத்தை சுற்றிலும் பழங்காலத்தை நினைவூட்டும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
துணை நடிகர்கள் சிலர் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி, 'வெள்ளையனே வெளியேறு' என்ற கோஷம் எழுப்ப, இன்னொரு பக்கம் பெண்கள் உரலில் நெல் குத்திக் கொண்டிருந்தார்கள். மற்றொரு புறம் அந்நாளில் புகழ்பெற்ற பாவை கூத்து நடந்தது.
ஏதோ காலயந்திரத்தில் 70 ஆண்டுகள் பின்னோக்கி வந்துவிட்டதைப் போன்ற பிரமிப்பை உண்டாக்கியிருந்தனர்.
சிறப்பு விருந்தினர் கமல்ஹாசன், நீராவி என்ஜினுடன் கூடிய ஒரு ரெயிலில் வந்து மேடையிலிறங்கினார். பின்னர் மதராஸபட்டிணம் பாடல்களை அவர் வெளியிட்டு வாழ்த்தினார். பழைய கிராமபோன் இசைத்தட்டு வடிவில் ஆடியோ சிடி வெளியிடப்பட்டது.
படத்தில் இடம் பெற்ற பாடல்களை, நடன கலைஞர்கள் மேடையில் பாடலுக்கு தகுந்தப்படி நடனம் ஆடினார்கள்.
1928, 1932, 1935 ஆகிய 3 காலக்கட்டங்களில் சென்னையில் வாழ்ந்த முதியவர்கள் 3 பேர் மேடையில் கவரவிக்கப்பட்டார்கள். அதில் கவிஞர் பூவை செங்குட்டுவனும் ஒருவர்.
இயக்குநர்கள் ஷங்கர், சேரன், பாலா, பிரபுதேவா, லிங்குசாமி, சசிக்குமார், வசந்த், விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைபுலி ஜி.சேகரன், பட அதிபர் ஏ.எல்.அழகப்பன், நடிகர் ராஜேஷ், பார்த்திபன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
Comments
Post a Comment