3 இடியட்ஸ் படம் மிகப்பெரும் வெற்றி - மாதவன் ஹேப்பி

பாலிவுட் திரையுலகில் சமீபத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட படமான 3 இடியட்ஸ் மிகப்பெரும் வெற்றியடைந்ததில் அத் திரைப்படத்தில் 3 இளைஞர்களில் ஒருவராக நடித்த மாதவன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

டிசம்பர் மாதம் மும்பையில் வெளியான இந்த படம் 19 நாட்களில் 315 குரோர்களை சம்பாதித்து விநியோகஸ்தர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளதுடன் உலகம் முழுதும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

எஞ்சினியரிங் கல்லூரியில் படித்து வரும் மூன்று இளைஞர்களுக்கு இடையேயான நட்பு பற்றியும் இந்தியா முழுதும் கல்விதிட்டங்களில் உள்ள குறைபாடு பற்றியும் அதனால் மாணவர்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும் அழகாக எடுத்து இயம்புகிறது இந்த 3 இடியட்ஸ் படம். பாலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் ஸ்டாரான அமீர்கானுடன், மாதவன் மற்றும் சர்மான் ஜோஷி ஆகியோரும் கரீனா கபூரும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தியில் வெளிவந்த பிரபல நாவலான சேட்டன் பாகட் இன் தழுவலே இந்த படம். மாதவன் ஏற்கனவே இந்தியில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ள 3 இடியட்ஸே அவருக்கு மிகப்பெரும் புகழை ஈட்டித் தந்துள்ளது. இது நாள் வரை தமிழ் திரையுலகமான கோடம்பாக்கத்தில் மட்டுமே நன்கு அறிமுகமாகியிருந்த மாதவன் தற்போது இந்தியா முழுவதும் பிரசித்தமாகியுள்ளதுடன் மும்பையில் தெருவில் செல்லும் மக்களாலும் அடையாளங் காணப்படும் நிலையை எட்டியுள்ளார். 3 இடியட்ஸ் பட ரிலீசுக்குப் பின்னர் பத்திரிகை நிருபர்களுக்குப் பேட்டியளித்த மாதவன் எதிர்காலத்தில் இது போன்ற நல்ல கேரக்டர்களில் இன்னமும் சிறப்பாக தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிப்பேன் எனக் கூறியுள்ளார். தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் இளவட்டத்தினரை அதிகம் கவரும் ரொமாண்டிக் லவ் ஸ்டோரிகளில் நடித்து சாக்லெட் போய் எனப் பெயர் பெற்ற மாதவன் இனி பாலிவுட்டில் மட்டுமே வலம் வருவார் எனத் தோன்றுகிறது. விரைவில் அமிதாப் பச்சனுடன் ஒரு முக்கிய பாத்திரத்தில் மாதவன் நடித்த டீன் பட்டி எனும் அடுத்த படம் வெளிவரவுள்ளது.

Comments

Most Recent