முதுகில் குத்திவிட்டார்களே...! - அசல் விழாவில் அஜீத்



என் வாழ்க்கையில் பலர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள். அதை நினைவுபடுத்தும் விதத்தில் அசல் படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது என்றார் நடிகர் அஜீத்.

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜீத் நாயகனாக நடிக்க சரண் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.

அவர் தான் ஆடியோ சிடியை வெளியிடுவார் என்று தயாரிப்பாளர் சார்பில் கூறப்பட்டது. ஆனால் சில முக்கிய அலுவல் காரணமாக ரஜினி இந்த விழாவுக்கு வரவில்லை என்று விழா துவங்குவதற்கு சில நிமிடம் முன்பு அறிவித்த நடிகர் பிரபு, அவரே முதல் சிடியை வெளியிட அதை அஜீத் பெற்றுக் கொண்டார்.

பின்னர் பேசிய அஜீத், நல்ல படத்துக்கு பப்ளிசிட்டி தேவையில்லை. இன்னும் தயாரிப்பிலிருக்கும் ஒரு படத்தைப் பற்றி நிறைய சொல்லவும் நான் விரும்பவில்லை. இந்தப் படத்தின் தலைப்பு மிக வித்தியாசமானது. மிகவும் பவர்புல்லானது. கடவுளே பார்த்து இந்த தலைப்பை எங்களுக்கு அனுப்பியதாக நினைக்கிறேன். படத்துக்காக எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர்.

மிகச் சிறந்த படமாக அசல் வந்திருக்கிறது. இது வரை நான் செய்த படங்களில் மிகவும் வித்தியாசமாக இந்தப் படம் இருக்கும். இதனுடன் வேறு படத்தை ஒப்பிடக் கூட முடியாது. அந்த அளவு ஒரிஜினலாக எடுத்துள்ளோம்.

இந்தப் படத்தில் எங்கே எங்கே என்று ஒரு பாடல் வைத்துள்ளோம். வைரமுத்து எழுதியுள்ளார். என் மனதுக்கு மிகவும் பிடித்த பாடல் அதுதான். கடந்த காலத்தில் என் திரைவாழ்க்கையிலும் நிஜ வாழ்க்கையிலும் முதுகில் குத்தியவர்கள் நிறைய பேர். அதை நினைவுபடுத்தும் பாடலாக அந்த வரிகள் இருந்ததால் என் மனதுக்கு நெருக்கமான ஒன்றாகிவிட்டது என்றார்.

Comments

Most Recent