விருது வேட்டையைத் துவங்கியது கேமரூனின் 'அவதார்'!



சர்வதேச பிளாக் பஸ்டராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் இந்தப் படம் குவிக்கவிருக்கும் விருதுகளுக்கு கட்டியம் கூறும் வகையில் இந்த முதல் விருது அமைந்துள்ளது.

12 ஆண்டுகள் கடும் உழைப்பில் கேமரூன் உருவாக்கியுள்ள அற்புதத் திரைப்படம் அவதார். திரையிட்ட அனைத்து நாடுகளிலும் போட்டிக்கு வேறு எந்த படமும் நெருங்க முடியாத அளவுக்கு நம்பர் ஒன் இடத்தில் ஆட்சி செலுத்தி வரும் படம் இது. கிட்டத்தட்ட இந்திய புராண நம்பிக்கைகளை ஒத்த கான்செப்ட், அதே நேரம் மனித நேயம், சுற்றுத் சூழல் பாதுகாப்பு என பல விஷயங்களை அழுத்தம் திருத்தமாகச் சொன்ன படைப்பு இது. அவதார் என்ற வார்த்தை கூட இந்திய வார்த்தையே என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 1.5 பில்லியன் டாலருக்கு மேல் வசூலைக் குவித்துள்ள அவதார், அடுத்த இரு வாரங்களில் டைட்டானிக்கின் வசூல் சாதனைகளை முறியடித்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விருதுகளுக்கான பரிந்துரைகளிலும் அவதாரே முதலிடத்தில் உள்ளது. இதில் 2009-ன் கோல்டன் குளோப் சிறந்த டிராமா விருது அவதாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்கு முன் கேமரூனின் டைட்டானிக் படத்துக்கும் இதே போல முதல் முதலில் வழங்கப்பட்ட விருது கோல்டன் குளோப்தான். அதன் பிறகு ஆஸ்கர் விருதுகளில் 11-ஐ அள்ளியது டைட்டானிக். 'இந்த உலகின் அரசனைப் போல உணர்கிறேன்' என்றார் கேமரூன், அந்த விழாவில்.

நிச்சயம் இந்த முறையும் அதற்கு நிகராக பெருமையை அவதார் தேடித்தரும் என நம்புகிறார்கள் சர்வதேச கலை ரசிகர்கள்.

"கேமரூன் மாதிரி ஒரு அற்புதமான படைப்பாளி மட்டுமே இத்தனை நம்பிக்கையோடும், கர்வத்தோடும் மீண்டும் மீண்டும் இந்த உலகின் அரசனாக தன்னைச் சொல்லிக் கொள்ள முடியும். அதில் சிறிதும் தவறில்லை.." என்கிறது ஹாலிவுட் இணையதளம்.

சிறந்த நடிகை...

கால்பந்தாட்டக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி ப்ளைண்ட் சைட் படத்தின் ஹீரோயின் சாண்ட்ரா புல்லக்கிற்கும் 'கிரேஸி ஹார்ட்' படத்தின் ஜெப் பிரைட்ஸுக்கும் சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது.

ஷெர்லக் ஹோம்ஸ் படத்தில் நடித்த ராபர்ட் டௌனி ஜூனியர் மற்றும் ஜூலியா அண்ட் ஜூலியா படத்தின் மெரில் ஸ்டீப்புக்கும் சிறந்த நடிகர் விருது (மியூசிக்கல் அண்ட் காமெடி) வழங்கப்பட்டது.

இதே பிரிவில் சிறந்த படத்துக்கான விருது 'தி ஹேங்ஓவர்' படத்துக்கு கிடைத்துள்ளது.

'பிரிஸியஸ்' படத்தில் நடித்த மோ நிக், 'இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்' படத்தில் நடித்த கிறிஸ்டோப் வால்ட்ஸ் ஆகியோருக்கு சிறந்த துணை நடிகர்களுக்கான விருதும் தரப்பட்டுள்ளது.

தி ஹர்ட் லாக்கர் படத்துக்காக கேதரைன் பெயர் சிறந்த இயக்குநர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இவர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விருதுப் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை.

அப் திரைப்படத்துக்கு சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் உலகப்போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தி வொய்ட் ரிப்பன் என்ற ஜெர்மன் படத்துக்கு சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற விருது கிடைத்துள்ளது.

Comments

Most Recent