முதல்வர் கருணாநிதி திரைப்படத் தொழிலாளர்களுக்கு பையனூரில் வழங்கிய இடத்தை இன்று நேரில் பார்வையிட்டனர் பெப்ஸி தலைவர் வி சி குகநாதன் உள்ளிட்ட த...
சென்னை அருகே உள்ள பையனூரில் பிரதானமான பகுதியில் கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலப்பரப்பை தமிழ் சினிமாக்காரர்களுக்கு வழங்கியுள்ளார் கருணாநிதி. இயற்கை வனப்பும் மரங்களும் சூழ அமைந்துள்ள இந்த இடம் முழுக்க ஒரே நிலப்பரப்பாக அமைந்துள்ளது.
இன்றைய மார்க்கெட் மதிப்புப் படி பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்த இடம் இலவசமாகத் தரப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெயருக்கு சில ஆயிரம் ரூபாயைக் கட்டுகிறார்கள்.
இந்த இடத்தில் திரைப்படத் தொழிலாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வீடுகளைக் கட்டித் தருகிறது தமிழக அரசு. அதுவும் கூட கிட்டத்தட்ட இலவசம்தான்!
இங்கேயே முதல்வர் கருணாநிதி பெயரில் ஒரு திரைப்பட நகரமும் அமைகிறது.
இந்த இடத்தில் வீடுகளைப் பெறுவதில் உள்ளுக்குள் பெரும் போட்டியே நிலவுகிறது. சங்க உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு என்றால் கூட, குடும்பத்து நான்கைந்து வீடுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதை மனதில் கொண்டுதான் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய ரஜினி, ‘வசதி உள்ளவர்களும் வரிசையில் நின்று வீடு வேண்டும் என கையேந்தாதீர்கள்… அது பெரும் பாவம்’ என்று பேசினார்.
வீடுகளை எப்படி தருவது, முறைகேடுகள் நடக்காமல் வழங்குவது போன்றவை குறித்து பெப்ஸி தலைவர் குகநாதன் போன்றோர் சில திட்டங்களை வகுத்து முதல்வரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்களுக்கு தரப்பட்ட இடத்தைப் பார்வையிட விசி குகநாதன் தலைமையில் அனைச்சு திரையுலக சங்க பிரதிநிதிகள் இன்று பையனூருக்குச் சென்றனர். இடம் முழுவதையும் பார்வையிட்டனர்.
பெப்ஸி சார்பில் விசி குகநாதன், இயக்குநர்கள் சங்கம் சார்பில் ஆர்கே செல்வமணி,பிஆர்ஓ யூனியன் சார்பில் டைமண்ட் பாபு, விஜயமுரளி மற்றும் பெருதுளசி பழனிவேல், பெப்ஸியின் 23 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் என அனைவரும் பையனூருக்கு வந்திருந்தனர்.
Comments
Post a Comment