Lawrance clashes with Cheran in stage

http://thatstamil.oneindia.in/img/2010/03/28-lawrance-200.jpg
மோதல் என்றதும் ஏதோ கட்டிப்புரண்டு சண்டை போட்டதாக நினைக்க வேண்டாம். இது ஆரோக்கியமான கருத்து மோதல்தான்.

சனிக்கிழமை மாலை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் கோரிப்பாளையம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. வழக்கமாக தியேட்டருக்குள் வைப்பார்கள். ஆனால் விஜய்காந்த் சிறப்பு விருந்தினராக வருவதாலோ என்னமோ, வெளியில் பெரிய மேடை போட்டு பக்கா அரசியல் களையுடன் நடத்தினர் விழாவை.

கோரிப்பாளையம் படத்தை தனது பாண்டிய நாடு தியேட்டர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார் மைக்கேல் ராயப்பன். இவர் வேறு யாருமல்ல, விஜய்காந்த் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர். கடந்த முறை தேமுதிகவின் நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர். தேர்தலில் தோற்றாலும் அதன் பிறகு நாடோடிகள் படத்தைத் தயாரித்து பெரும் வெற்றி கண்டவர்.

மாயாண்டிக் குடும்பத்தார் படத்தினை இயக்கிய ராசு மதுரவன் இயக்கியுள்ள இந்தப் படம் ஷூட்டிங்கெல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இசை சபேஷ் முரளி.

படத்தின் ஆடியோவை விஜய்காந்த் வெளியிட, லாரன்ஸ் பெற்றுக் கொண்டார்.

அதற்கு முன் வாழ்த்திப் பேச அனைத்து விஐபிக்களையும் அழைத்தார்கள். அப்போது பேச வந்த சேரன், சில நிமிடம் சம்பிரதாயமாகப் பேசிவிட்டு விவகாரத்துக்கு வந்தார்.

"இன்றைக்கு திரையுலகம் பெரிய நெருக்கடியில் உள்ளது என்பதுதான் உண்மை. இதற்குக் காரணம் சேனல்களின் போட்டிதான்.

சேனல்களின் போட்டியை மீறி எத்தனை தயாரிப்பாளர்களால் வெற்றி பெறமுடியும்?

முன்பெல்லாம் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் வந்து, விமர்சனம் வெளியானாலே போதும்...படம் பற்றி எல்லாருக்கும் தெரியும். குறைந்த செலவுதான் இதற்கு ஆகும். ஆனால் இப்போது அப்படியில்லை. என்னதான் பேப்பரில் விளம்பரம் கொடுத்தாலும், பிரபலமான சேனலில் பெரும் தொகை செலவழித்து தொடர்ந்து விளம்பரம் போட்டால்தான் படம் வெளியானதே தெரிகிறது.

ஒரு படத்துக்கு ரூ 1.5 கோடி செலவு செய்து சேனல்களில் விளம்பரம் செய்தால்தான் படம் ஓட முடியும் என்கிற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் கூலித் தொழிலாளர்களாக மாறி வாழ்க்கை பறிபோகும் நிலை இருக்கிறது.

எல்லாப் படங்களையும் சேனல்கள் வாங்குவதில்லை. அது முடியவும் முடியாது. அப்படியானால் மற்ற படங்கள் எப்படி ஓடும்? வாங்காத படங்களை பழி வாங்குகிற மாதிரி, கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றன இந்த சேனல்கள். எப்படி அந்தப் படம் ஓடும்?

மலை மாதிரி உயர்ந்து இருக்கிற சினிமா சரிந்து விழுந்து மண் மேடாகும் நிலை வந்திருக்கிறது... இதற்கு ஏதாவது ஒரு தீர்வை இந்த மேடையில் உள்ள ராமநாராயணன் சொல்வாரா? என்று கேட்டுவிட்டுப் போனார்.

லாரன்ஸ் எதிர்ப்பு

அடுத்துப் பேச வந்த லாரன்ஸ், சேரனின் இந்தக் கருத்தை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், "டிவியால படம் பாதிக்கப்டுதுன்னு சொல்லக் கூடாது. டிவியாலதான் இன்னிக்கு பல படங்கள் நல்லா ஓடுது. டிவியில வந்த மஸ்தானா மஸ்தானா நிகழ்ச்சி மூலம் எவ்வளவோ பேருக்கு நன்மை கிடைச்சது. இப்போ கலைஞர் டிவி மூலம் ஒரு குழந்தைக்கு இதய ஆபரேஷன் செய்தோம். இதெல்லாம் கிடைக்குதுன்னா அதுக்கு காரணம் டிவி சேனல்கள் நல்ல நிலைமையில் இருப்பதுதான்.

எத்தனையோ படங்கள் ரிலீஸ் ஆக சேனல்கள் உதவுது. ஆனா எல்லா படங்களையும் அவங்களால அப்படி ரிலீஸ் பண்ண முடியாது. எனவே நாமதான் போராடி படங்களை வெளியில தெரிய வைக்கணும்.." என்று பேசிக் கொண்டே போனார்.

இந்த மோதலுக்கு நிச்சயம் ஒரு பதில் தருவார் ராமநாராயணன் என்று பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால் கடைசிவரை இதுபற்றி வாயே திறக்கவில்லை அவர்.

ராம நாராயணன் கலைஞர் டிவியின் முக்கியப் பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இதுபற்றி பேச வந்த விஜய்காந்தும், கடைசிவரை தனது கருத்தைச் சொல்லாமல் சுற்று வளைத்துப் பேசிவிட்டு அமர்ந்தார்.

Comments

Most Recent