சைக்கிளை வைத்தாவது படம் எடுத்து வெற்றி பெறுவேன்! - ராம.நாராயணன்

http://thatstamil.oneindia.in/img/2010/04/17-ramanara-deva200.jpg
மிருக வதைச் சட்டம் காரணமாக என்னால் மிருகங்களை வைத்துப் படமெடுக்க முடியவில்லை. காரை வைத்து எடுத்துள்ளேன். காருக்கும் தடை வந்தால் சைக்கிளை வைத்தாவது எடுத்து ஜெயிப்பேன்..." என்று இயக்குநர் ராம நாராயணன் கூறினார்.

இயக்குநர் ராம.நாராயணன், 119 படங்களை இயக்கியவர். தமிழ் சினிமாவில் எந்த இயக்குநரும் செய்யாத சாதனை இது.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பில் இருப்பதால், கடந்த சில ஆண்டுகளாக அவர் படங்களை இயக்கவில்லை.

இப்போது அவரது இயக்கத்தில் வெளிவரும் 120-வது படமாக வெளியாகிறது குட்டிப் பிசாசு. இதில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், ஸ்பெஷல் எபெக்ஸ்ட் என நவீன உத்திகளைப் பயன்படுத்தியுள்ளாராம்.

குட்டிப் பிசாசு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் அரங்கில் வெள்ளிக்கிழமை காலை நடந்தது.

இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் பாடல்களை வெளியிட, இயக்குநர் ஷங்கர், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டனர்.

விழாவில், ராம.நாராயணன் பேசுகையில், "நான் எப்போதுமே பெரிய நடிகர்-நடிகைகளை வைத்துப் படம் எடுத்ததில்லை. அவர்களின் கால்ஷீட்டுக்காக காத்திருந்ததில்லை. அவர்களிடம், கால்ஷீட் கேட்டு, அவர்களை சங்கடப்படுத்தியதும் இல்லை.

அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்துவதை விரும்பாமல், மிருகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி பெற்றேன்.

இப்போது மிருகவதை சட்டம் கொண்டுவரப்பட்டு கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள். அதனால் மிருகங்களை வைத்து படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் குட்டிப்பிசாசு படத்தில், ஒரு காரை முக்கிய கதாபாத்திரமாக்கி படம் எடுத்து இருக்கிறேன்.

காரை வைத்தும் படம் எடுக்க கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால், சைக்கிளை வைத்தும் படம் எடுப்பேன். காரணம் இந்த திரை துறையை விட்டு என்னால் வேறு எங்கும் செல்ல முடியாது.

இந்தப் படத்துக்காக, 18 அடி உயர கார் மனிதன் உருவாக்கப்பட்டு இருக்கிறான். அவன் செய்யும் அட்டகாசங்கள் படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும். அதோடு மந்திர மனிதன், ராட்சஷ பாம்பு ஆகியவைகளையும் கிராபிக்சில் உருவாக்கி இருக்கிறோம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் கோடை விடுமுறையில் வெளிவர இருக்கிறது..." என்றார்.

விழாவுக்கு தமிழ் திரையுலகின் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.

Comments

Most Recent