தசாவதாரம் சினிமா கதை யாருடையது என்ற சர்ச்சை மீண்டும் தலை தூக்கியுள்ளது. அந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா...
தசாவதாரம் சினிமா கதை யாருடையது என்ற சர்ச்சை மீண்டும் தலை தூக்கியுள்ளது. அந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று அரசிடம் சென்னை ஐகோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. தசாவதாரம் கதை சர்ச்சை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தாம்பரத்தை சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் செந்தில்குமார் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தசாவதாரம் வெளியிடப்படுவதற்கு முன்பே அதற்கான கதையை நான் எழுதியிருந்தேன். இந்த கதைக்கு 10 வேடங்களில் நடிப்பதற்கு கமல்ஹாசன் தான் பொருத்தமாக இருப்பார் என்பதால் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு தபால் மூலம் இந்த கதையை அனுப்பி வைத்தேன். அந்த தபாலை முரளி என்பவர் பெற்றுக்கொண்டார். அதன் பின்பு என்னிடம் யாரும் எந்த தொடர்பும் கொள்ளவில்லை. இந்த நிலையில் `தசாவதாரம்' படம் வெளியானது. நான் எழுதிய கதையை படமாக தயாரித்து வெளியிட்டிருந்தனர். எனவே, கமல்ஹாசன் உள்ளிட்டோர் மீது மோசடி வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தேன். மேலும், தாம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தேன். இந்த விவகாரம் தொடர்பாக ஆழ்வார்பேட்டை போலீசில் புகார் கொடுப்பதற்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். எனவே, ஆழ்வார்பேட்டை போலீசிலும் நான் புகார் கொடுத்தேன். இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த புகார் கொடுத்த நேரத்தில் கமல்ஹாசன் பெயரில் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே, மோசடி மற்றும் கொலை மிரட்டல் குற்றப்பிரிவின் கீழ் அவர் மீது புகார் கொடுத்துள்ளேன். இந்த வழக்கை பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும், என்று கூறியுள்ளார்.
செந்தில்குமாரின் இந்த மனு, நீதிபதி ஆர்.ரகுபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த விவகாரம் குறி்தது ஆழ்வார்பேட்டை போலீசில் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, என்று வாதிட்டார். அதைத்தொடர்ந்து நீதிபதி, `இதுபோன்ற புகார் வந்திருக்கிறதா, வந்திருந்தால் அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது பற்றி பதில் அளிக்க வேண்டும்' என்று அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார்.

Comments
Post a Comment