கேரளாவில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தியேட்டர் அதிபர்கள் இடையிலான மோதல் வலுத்ததையடுத்து, படப்பிடிப்பு நேற்று அதிரடியாக நிறுத்தப்பட்டன. ...
கேரளாவில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தியேட்டர் அதிபர்கள் இடையிலான மோதல் வலுத்ததையடுத்து, படப்பிடிப்பு நேற்று அதிரடியாக நிறுத்தப்பட்டன. நடிகர், நடிகைகள் அதிக சம்பளம் வாங்குவதால் சினிமா தயாரிப்பு செலவு அதிகரிப்பதாக கேரள தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். நடிகர் சங்கத்துடன் பல முறை பேச்சு நடத்தியும் சம்பளத்தை குறைக்க நடிகர், நடிகைகள் சம்மதிக்கவில்லை. இதுதவிர, படத்தை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர்கள் & தியேட்டர் அதிபர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காலைக் காட்சி தவிர, மற்ற 3 காட்சிகளின் வசூலை வைத்துதான் படத்தை ஓட்டுவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். காலை காட்சியையும் சேர்க்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் கொச்சியில் சினிமா தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் சங்க கூட்டம் நடந்தது. மலையாள நடிகர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள், மலையாள தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இருக்கும் பிரச்னைகள் குறித்து பேசி தீர்த்த பிறகே படப்பிடிப்பை தொடங்குவது என இக்கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. புதிய படங்களின் படப்பிடிப்புகளை நேற்று முதல் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே நடந்து வரும் படப்பிடிப்புகள் தவிர, புதிய படப்பிடிப்புகள் எதுவும் நடக்காது என மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சாபு செரியான் அறிவித்துள்ளார்.

Comments
Post a Comment