Tamils protest Amitabh Bachchan''s Lanka visit

http://img1.dinamalar.com/cini//CNewsImages/Thumb/2034amitap_T.jpg
கொழும்பில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் நடிகர் அமிதாப்பச்சன் வீட்டை நாம் தமிழர் இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜூன் மாதம் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் விளம்பர தூதராக இருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு தமிழ் முன்னணி ஹீரோக்கள் சிலருக்கும் அழைப்பிதழ் அனுப்பப் பட்டது. ஆனால் அழைப்பிதழை தமிழ் நடிகர்கள் வாங்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணத்துக்கு காரணமான ராஜபக்சே அரசாங்கம் கொழும்பில் நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படத் துறையை சேர்ந்த எவரும் கலந்து கொள்ளக் கூடாது. அதோடு அமிதாப்பச்சன் தனது நடவடிக்கைகளை கைவிட வேண்டும், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கூறியுள்ள நிலையில் மும்பையில் அமிதாப் பச்சன் வீட்டை தமிழர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். மும்பை ஜூகுவில் உள்ள நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டை நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக்கூடாது, அந்த நிகழ்ச்சிக்கான விளம்பர தூதர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் கோஷமிட்டனர். போராட்டத்தின் போது அமிதாப்பச்சன் வீட்டில் இருந்தார். போராட்டம் நடந்து முடிந்த பிறகு நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த சிலர் அமிதாப்பச்சனை சந்தித்து தமிழர்களின் உணர்வை மதித்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

Most Recent