திரைப்பட தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை: சம்மேளனம் தீர்மானம்

அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் சென்னையில் நடந்தது. அகில இந்திய தலைவர் தினேஷ் சக்ரவர்த்தி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வி.சி.குகநாதன், பொருளாளர் சிவா, துணை தலைவர்கள் ஹிமானுஷ் பட், அபர்ணா கட்டக், ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மற்ற தொழிலாளர்களைப் போல திரைப்பட தொழிலாளர்களுக்கும் 8 மணி நேர வேலையை கட்டாயம் நெறிமுறைப் படுத்த வேண்டும், 10 சதவிகிதமாக உள்ள ஊதிய உயர்வு விகிதத்தை அதிகரிக்க வேண்டும், சில மாநிலங்களில் தொலைக்காட்சி தொழிலாளர் சங்கம் தனியாக செயல்படுகிறது, அது அகில இந்திய அமைப்போடு இணைய வேண்டும், அகில இந்திய சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக இந்திய திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் பிரமாண்ட நட்சத்திர கலை விழா நடத்துவது, வெளிநாட்டில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் வி.சி.குகநாதன் நிருபர்களிடம் கூறும்போது, ‘செப்டம்பர் 15ல் அகில இந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க மாநாட்டை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது. அகில இந்திய நட்சத்திர கலைவிழா ஜனவரியில் நடக்கிறது. இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஊதிய உயர்வு குறித்து பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்’ என்றார்.

Comments

Most Recent