Rajini enjoys Vairamuthu's poetry in different getup | வைரமுத்து கவிதை.. மாறுவேடத்தில் வந்து ரசித்த ரஜினி!

http://thatstamil.oneindia.in/img/2010/06/08-rajini-1200.jpg
சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னை தீவுத்திடலில் ஒரு செயற்கை தாஜ்மகால் உருவாக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமையில் அந்த தாஜ்மகாலில் ஒரு காதல் கவியரங்கம் சமீபத்தில் நடந்தது. தமிழக அரசின் சுற்றுலாத் துறைதான் அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

தாஜ்மகால் மேடையில் கவிஞர் வைரமுத்து அமர்ந்திருக்க, காதல் கவியரங்கம் தொடங்கியது.

இந்த நிகழ்வுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலும் இளைஞர்கள். அதில் ஒரே ஒரு முதியவர் மட்டும் வித்தியாசமாக தெரிந்தார். தள்ளாத வயது, நரைத்த தலை, கூரிய பார்வை. கவியரங்கத்தின் மீதே கண்ணும் காதும் வைத்து லயித்து இருந்தார்.

வைரமுத்துவின் கவிதை வரிகள் மழையாய் விழுந்தன. வரிக்கு வரி கூட்டம் கைத்தட்ட, அந்த வயதான முதியவர் மட்டும் அடிக்கடி தலையாட்டினார். தாடியை தடவியடி சிரித்துக் கொண்டார்.

"இதுதான் காதலுக்கு சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த் துளி" என்ற வரியையும், "கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது" என்ற வரியையும் ஆரவாரத்தோடு சபை ரசித்தபோது, அவரும் ரசித்தார்.

"யமுனையை விட கூவம் தாஜ்மகாலே கொடுத்து வைத்தது…யமுனை வற்றிவிடும்…கூவம் வற்றாது"

-என்று வைரமுத்து கவிதை சொன்னபோது எழுந்த சிரிப்பின் அலைகளில், முதியவரும் மிதந்தார்.

கவியரங்கம் முடிந்தது. தடியை ஊன்றிக் கொண்டே முதியவர் கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விட்டார்.

அந்த முதியவர் வேறு யாருமல்ல. 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த்!!

நேரடியாக வந்தால் பரபரப்பு ஏற்படும் என்பதால், ரஜினிகாந்த் மாறுவேடத்தில் மின்னலாய் வந்து ரசித்துவிட்டுப் போனார்.

யாரும் அவரை அடையாளம் காண முடியவில்லை. அவரை அறிந்துகொண்டவர் ஒரே ஒரு அதிகாரி மட்டுமே.. அவரும் காட்டிக் கொடுக்கவில்லை!

ரஜினி மாறுவேடத்தில் வருவது இது முதல்முறையல்ல.. சென்னையில் சில குறிப்பிட்ட படங்களை மாறுவேடத்தில் போய் மக்களோடு மக்களாக அமர்ந்தே அவர் பார்த்திருக்கிறார்.

Comments

Most Recent