Vikram wishes to join hands with Manirathnam again | மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கணும்!-விக்ரம்

http://thatstamil.oneindia.in/img/2010/06/11-raavanan-200.jpg

மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம் ராவணன்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள படம் இது. தமிழில் விக்ரம்- ஐஸ்வர்யாராய் நடித்துள்ளனர். இந்தியில் விக்ரம் பாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார். இந்தியில் விக்ரமும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவரது முதல் இந்திப் படம் இதுதான்.

வரும் ஜூன் 18ம் தேதி இந்த மூன்று படங்களும் உலகமெங்கும் வெளியாகின்றன.

இதையொட்டி நடிகர் விக்ரம், சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில்,

ராவணன் ராமாயண கதையும் அல்ல. மகாபாரத கதையும் அல்ல. வீரா, தேவ், ராகினி ஆகிய மூன்று கதாபாத்திரங்களை சுற்றி வரும் கதை. வீரா, ஒரு நாட்டுப்புறத்தான். நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் நடுவில் உள்ள ஒரு மனிதன். அவனிடம் குழந்தைத்தனமும் உண்டு. ஆக்ரோஷமும் உண்டு. ரொம்ப பவர்புல்லானவன். இந்த கதாபாத்திரத்தில், தமிழில் நான் நடித்திருக்கிறேன். இந்தியில் அபிஷேக்பச்சன் நடித்திருக்கிறார்.

தேவ், ஒரு போலீஸ் அதிகாரி. இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கொள்கையுடன் வாழ்பவன். அவனுடைய மனைவி மீது அபாரமான காதல். அவளை எப்போதும் ரசிப்பவன். ராகினிக்கு நடனமும், பாட்டும், குழந்தைகளுடன் விளையாடுவதும் பிடிக்கும். தேவ் கதாபாத்திரத்தில், தமிழில் பிருதிவிராஜ் நடித்துள்ளார். இந்தியில், நான் நடித்திருக்கிறேன்.

இந்த மூன்று கதாபாத்திரங்களும் ஒரு காட்டுக்குள் மாட்டிக்கொண்டால், என்ன ஆகும்? என்பதுதான் படத்தின் கரு. வாழ்க்கையா, மரணமா? என்கிற சூழ்நிலையில், மூன்று பேருக்கும் இடையே நடைபெறும் சம்பவங்கள்தான் கதை. மூன்று பேரில் யார் ஜெயிக்கிறார்கள்? யார் நல்லவனாக இருந்து கெட்டவன் ஆகிறான்? யார் கெட்டவனாக இருந்து நல்லவன் ஆகிறான்? என்பதே படத்தின் முடிவு.

மனித உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் திரையில் காண்பிப்பதில் 'கிங்' மணிரத்னம். அதை, 'ராவணன்' படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் இதுவரை இயக்கிய படங்களிலேயே மிக சிறந்த படம் என்று படத்தை பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

வீரா, நான் இதுவரை நடித்திராத சவாலான கதாபாத்திரம். முதல் முறையாக இந்தியில் நடித்து இருக்கிறேன். "ஐஸ்வர்யாராய் தமிழ் பேசும்போது, நீ இந்தி பேச முடியாதா?" என்று மணிரத்னம் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இந்தி பேசி நடிப்பதற்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். முதல் படத்தில் நடிப்பது போல் இருந்தது.

அபிஷேக் பச்சன் எனக்கு நீண்ட கால நண்பர். ஐஸ்வர்யா ராய் பந்தா இல்லாமல், எல்லோருடனும் எளிமையாக பழகினார். கதாபாத்திரத்துக்காக மெனக்கெடுகிற ஒரு நல்ல நடிகை. அவர் என் ரசிகை என்று சொன்னது எனக்குப் பெருமையாக இருந்தது.

மூன்று கதாபாத்திரங்களுமே போட்டிபோட்டு நடிக்க வேண்டும். என்றாலும், எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் போட்டி இல்லை. எந்த பிரச்சனையும் வரவில்லை. கருத்து வேறுபாடு, சண்டை ஏற்படவில்லை. பொதுவாகவே நான் நடிக்கிற எல்லா கதாபாத்திரங்களுக்காகவும் சிரமம் எடுத்துக்கொள்வேன்.

ராவணனுக்காக ரொம்ப கஷ்டப்பட்டேன். 150 நாட்கள் காட்டுக்குள், கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார்களே...அதுமாதிரி ஒவ்வொரு காட்சியிலும் ரிஸ்க் எடுத்து நடித்தேன். என்னை விட, அபிஷேக்பச்சனை விட, ஐஸ்வர்யாராய் இரண்டு மடங்கு கஷ்டப்பட்டார் என்பதுதான் உண்மை.

மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும். பாலா, தரணி ஆகியோரின் இயக்கத்திலும் மீண்டும் நடிக்க வேண்டும். தமிழில் இப்போது நல்ல இயக்குநர்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். அவர்களின் இயக்கத்திலும் நடிக்க வேண்டும் என்றார்.

'ராவண்' படத்தின் மூலம் இந்தி பட உலகுக்கு அறிமுகமாகிறீர்கள். தொடர்ந்து இந்தி படங்களில் நடிப்பீர்களா?, என்று கேட்டதற்கு, இப்போதே சில இந்தி பட வாய்ப்புகள் வருகின்றன. இங்கே வண்டி நன்றாக ஓடிக்கொண்டிருக்கும்போது நான் ஏன் இந்திக்கு போக வேண்டும்? எனக்கு பெயர்-புகழ் இரண்டும் இங்கே நிறைய கிடைக்கிறது. இதை விட்டுவிட நான் தயாராக இல்லை. தமிழ் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். மிக சிறந்த ஒரு வாய்ப்பு இந்தி படத்தில் வருகிறது என்றால், அதை மட்டும் ஏற்றுக்கொள்வேன் என்றார் விக்ரம்.

Comments

Most Recent