எந்திரன் பாடல் வெளியீடு மலேசியாவில் பிரமாண்ட ஏற்பாடு

http://cinema.dinakaran.com/cinema/gallery/EndhiranSpecial14.jpg

எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டுக்காக, மலேசியாவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் படம் 'எந்திரன்'. இதை சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் வண்ணம், அதி நவீன தொழில் நுட்பத்துடன் படத்தை இயக்குனர் ஷங்கர் உருவாக்கி உள்ளார். இதற்கான தொழில்நுட்ப பணிகள் மட்டும் வெளிநாட்டில் பல மாதங்கள் நடந்து வந்தது. இந்த படத்தின் பாடல்கள் நாளை மலேசியாவில் நடைபெரும் மாபெரும் வண்ணமிகு விழாவில் வெளியிடப்படுகிறது.
ஷாவ்லின் மாங்க்ஸ் அதிரடி சாகச நிகழ்ச்சி
விழாவில், சீனாவை சேர்ந்த ஷாவ்லின் மாங்க்ஸ் பங்கேற்கும் அதிரடி சாகச சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது. இதில் சீன துறவிகள், மெய்சிலிர்க்க வைக்கும் பலவிதமான சாதனை சண்டை காட்சிகளை நடத்துகின்றனர். இந்த துறவிகள் இளம் வயதிலேயே குங்க்ஃபூ கலையை கற்றவர்கள். இவர்களின் இந்த நிகழ்ச்சிகள் உலக நாடுகளின் பிரபலமானது. அந்தரத்தில் பறப்பது, கூரிய வாள்களால் மோதுவது, அதில் படுத்துக்கொண்டு சாகசம் புரிவது, தலையால் பல செங்கல்களை உடைப்பது என சீன படங்களில் மட்டுமே பாத்திருக்க கூடிய இந்த சாகசங்கள் நேரடியாக விழா மேடையில் நடத்தப்பட இருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி வேடம்
‘அவதார்', 'டெர்மினேட்டர்' உட்பட பல ஹாலிவுட் படங்களை உருவாக்கிய, அமெரிக்காவில் உள்ள ஸ்டான் வின்ஸ்டைன் ஸ்டூடியோவில், நவீன அனிமேட்ரானிக்ஸ் என்ற தொழில் நுட்பத்தில் 'எந்திரன்' உருவாகியுள்ளது. 'டெர்மினேட்டர்' படத்துக்கு ஹாலிவுட் ஹீரோ அர்னால்டின் உருவத்தை மோல்டு எடுத்தது போன்று ரஜினியின் உருவத்தை மோல்டு எடுத்து பயன்படுத்தியிருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதோடு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஹாலிவுட்டுக்கே புதுமையாக இருக்கும் படமாக, இதை ஷங்கர் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் ஸ்பெஷல் மேக்கப்பிற்காக, ரஜினிகாந்த் பலமணி நேரம் ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர்&ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவான அனைத்து படத்தின், பாடல்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதால், 'எந்திரன்' படத்தின் பாடல்களை, உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், வரும் 31&ம் தேதி மலேசியாவில் உள்ள புத்ரஜெயா சர்வதேச கன்வன்ஷன் மையத்தில் நடக்கும் பிரமாண்ட விழாவில் பாடல்கள் வெளியிடப்படுகிறது.
இதில், சன் நெட்வொர்க் தலைவரும் சன்பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, இயக்குனர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதி வாழ்த்து
இதுவரை யாரும் பார்த்திராத வகையில் நடைபெறும் 'எந்திரன்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளம் மகிழ்ந்து பிரத்யேகமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். நவீன தொழில் நுட்பமான ஹெச்.டி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வாழ்த்து, பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட இருக்கிறது.
புத்ரஜெயா சர்வதேச கன்வன்ஷன் மையம்…
பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ள புத்ரஜெயா சர்வதேச கன்வன்ஷன் மையம் புகழ்பெற்றதாகும். பலத்த பாதுகாப்புடன் கூடிய, பிரபல தலைவர்கள் பங்கேற்ற சர்வதேச மாநாடுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இங்கு நடந்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள இந்த மையம் முழுக்க முழுக்க, தகதகக்கும் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில்தான் 'எந்திரன்' பாடல்கள் வெளியிடப்படுகிறது.
நாளை முதல் கடைகளில்!
எந்திரன் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. 'புதிய மனிதா', 'காதல் அணுக்கள்', 'அரிமா அரிமா' ஆகிய பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். 'கிளிமஞ்சாரோ' என்ற பாடலை பா.விஜய்யும் 'இரும்பிலே ஒரு இருதயம்',  'பூம்பூம் ரோபாடா' ஆகிய பாடலை கார்க்கியும் எழுதியுள்ளனர். இதுதவிர, 'சிட்டி டான்ஸ் ஷோகேஸ்' என்ற பாடலை ராப் பாடகர் யோகி. பி, பிரவிண் மணி, பிரதீப் விஜய் இணைந்து பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடலுக்கும் வித்தியாசமான முறையில் இசை அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இதில் ரகுமானின் மகள் கதிஜா, முதன் முறையாக 'புதிய மனிதா' என்ற பாடலை ரகுமான், எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல் வெளியீடு நடக்கும் நாளை காலை முதல் உலகம் முழுவதும் பாடல் சிடி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments

Most Recent