ஆசின் மீது நடவடிக்கை உறுதி-ராதாரவி ஆவேசம்

http://thatstamil.oneindia.in/img/2010/07/13-asin-lanka-200.jpg
தொடர்ந்து நடிகர் சங்க தடைகளை மீறி வரும் நடிகை ஆசின் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி. ஓரிரு நாட்களில் முடிவெடுத்து அறிவிப்போம் என்று தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் ராதாரவி கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை அரங்கேற்றிய இலங்கை அரசின் ஆதரவுடன் கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியப் பட விழாவை ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகமும் புறக்கணித்தது. தென்னிந்திய திரையுலகம் மற்றும் பல்வேறு தமிழர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இந்தித் திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய நடிகர், நடிகைகள் போகவில்லை.

சல்மான் கான் போன்ற ஒருசிலர் மட்டுமே சென்றனர்.இதனால் கொழும்புப் படவிழா பிசுபிசுத்துப் போனது.

இந்தப் பட விழாவுக்குப் போனவர்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக தென்னிந்தியத் திரையுலக கூட்டமைப்பு அறிவித்தது. ஆனால் இந்தத்தடையை மீறி தற்போது நடிகை ஆசின், சல்மான் கானுடன் இலங்கையில் முகாமிட்டுள்ளார்.

ரெடி என்ற இந்திப் பட ஷூட்டிங்கை வேண்டும் என்றே கொழும்பில் வைத்துக் கொண்டுள்ள சல்மான் கானுடன் சேர்ந்து நடித்துவருகிறார். இதனால் தமிழ்த் திரையுலகினர் கொதிப்படைந்துள்ளனர். ஆசினுக்கு தடை விதிக்கப்படும், எப்படி அவர் தமிழ் சினிமாவில் நடித்து விடுவார் என்று தமிழ்த்திரையுலகினர் கூறி வருகின்றனர்.

ஆனால் எத்தனையோ இந்தியர்கள் கொழும்பு போகிறார்கள்,கிரிக்கெட் வீரர்கள் போகிறார்கள், சென்னையிலிருந்து விமானம் போகிறது, நான் போகக் கூடாதா என்று கேட்டு திரையுலகினரை கொதிப்படைய வைத்துள்ளார் ஆசின்.

இந்த நிலையில் படப்பிடிப்பு போக வேறு வேலைகளிலும் ஆசின் ஈடுபட ஆரம்பித்துள்ளார். வவுனியாவில் உள்ள மருத்துவமனைக்கு ராஜபக்சே மனைவி ஷிராந்தியுடன் சேர்ந்து டூர் அடித்துள்ளார் ஆசின். அவரை தமிழர்களுக்கான வீட்டு வசதித்திட்டத்தின் பிராண்ட்அம்பாசடராக இலங்கை அரசு நியமிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் தென்னிந்தியத் திரையுலகினர் மேலும்கோபமடைந்துள்ளனர்.

இதுகுறித்து ராதாரவி கூறுகையில், ஆசின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளுடன் ஏற்கனவே கலந்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் காரணமாக, அசின் மீதான நடவடிக்கை தள்ளிப் போடப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து விட்டது. எனவே ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுப்போம். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆசின் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்றார்.

ஆனால் ஆசின் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை.

Comments

Most Recent