இலங்கை செல்லும் நடிகர்களை மிரட்டுவதற்கு நடிகர் சங்க பொதுக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு, அதன் தலைவர் சர...
இலங்கை செல்லும் நடிகர்களை மிரட்டுவதற்கு நடிகர் சங்க பொதுக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு, அதன் தலைவர் சரத்குமார் தலைமையில் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய பலரும் நடிகர்கள் இலங்கைக்கு செல்லலாம், செல்லக்கூடாது என்ற இருவித கருத்துக்களையும் தெவித்தனர். குறிப்பாக பொதுச் செயலாளர் ராதாரவி இலங்கை படப்படிப்பில் கலந்து கொண்ட அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இறுதியாக, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 'இலங்கை பிரச்சினையை அறிவோம். அங்குள்ள தமிழர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறோம். ஆனாலும் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அங்கு செல்லும் நடிகர், நடிகைகளை சில அமைப்புகளும், தனிப்பட்டவர்களும் மிரட்டும் போக்கு இருந்து வருகிறது. திரைப்பட கலைஞர்கள் இலங்கை செல்லலாமா வேண்டாமா என்பது குறித்து திரைப்படத் துறை அமைப்புகள் இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழுதான் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவை நடிகர் சங்கம் ஏற்கும்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து சங்கத் தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் கூறும்போது, 'திரைப்பட கலைஞர்கள் எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு இலங்கை செல்லலாம், செல்லக்கூடாது என்று கூட்டு நடவடிக்கை குழு விரைவில் கூடி முடிவு செய்யும். தனிப்பட்ட நபர்களோ, அமைப்போ கலைஞர்களை மிரட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. திரைப்பட கலைஞர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதையும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று மிக்கவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார். 'திரைப்படங்களின் லாப நஷ்டத்தில் நடிகர்களுக்கு தொடர்பில்லை. அவர்கள் தொழிலாளர்கள் மட்டுமே. எனவே யாரும் நடிகர்களிடம் நஷ்ட ஈடு கேட்கக் கூடாது. நடிகர் சங்க உறுப்பினரான பிறகே திரைப்படங்களில் நடிக்க வேண்டும். உறுப்பினர் ஆகாதவர்கள் ஆகஸ்ட் 15&க்குள் உறுப்பினராக வேண்டும். இலங்கை படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரைப்பட சீரமைப்பு குழு, நலவாரியம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், விஜயகுமார், வாகை சந்திரசேகர், கருணாஸ், கஞ்சா கருப்பு, சரவணன், ராஜேஷ், அருண் விஜய், நடிகைகள் ராதிகா, பூர்ணிமா, நளினி, சீதா, ஸ்ரீப்ரியா, மனோரமா, சரண்யா, மும்தாஜ், லதா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கே.ஆர்.செல்வராஜ் வரவேற்றார். முடிவில் சார்லி நன்றி கூறினார்.
Comments
Post a Comment