கோடம்பாக்கம் வரவேற்கக் காத்திருக்கும் அவள் பெயர்..?

கோடம்பாக்கம் வரவேற்கக் காத்திருக்கும் அவள் பெயர்..? தமிழரசி! யார் அவள்?  அவளோடு தொடர்புபடும் மீரா கதிரவனை மடக்கிப்பிடித்தோம். மீரா கதிரவன்...?

தமது பெயரிலேயே ஒரு காதல் பக்தையை சுவீகரித்துக்கொண்டிருக்கும் மீரா கதிரவன், பாலுமகேந்திரா, தங்கர்பச்சான், லோகிதாஸ், போன்றவர்களிடம் பணிபுரிந்தவர். இவரது பெயர் மட்டுமல்ல இவரது படத்தின் பெயரும் காதலின் ஆழத்தையே சொல்கிறது. இவர் கனவுகளோடு இயக்கியிருக்கும் 'அவள் பெயர் தமிழரசி' படம், துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரபூர்வ தேர்வுப் பிரிவில் கலந்து கொண்டு திரும்பியிருக்கும் இந்த மகிழ்சியான தருணத்தில் நமது 4தமிழ்மீடியா செய்தியாளரிடம் பேசினார்.

“ ஒரு வார்த்தை வெளிப்படுத்தாத உணர்ச்சியை, சில பெயர்கள் நமக்கு சொல்லிட்டுப் போயிரும். அப்படிதான், அவள் பெயர் தமிழரசின்னு என் படத்துக்கு டைட்டில் வச்சேன். இந்த டைட்டிலைப் பார்த்தா, அவ யாரு, அவளைப் பற்றிய குறிப்பு, ஒரு தேடல்ன்னு ரசிகனுகிட்டயும் ஒரு தேடல் வெளிப்படும்ன்னு நினைக்கிறேன்.

வாழ்க்கை ஒவ்வொரு  அனுபவத்தையும் அழகாவோ, அழகில்லாமலோ சொல்லிட்டு போகுது. அதோட பயணிக்கிற நமக்கெல்லாமே தினம் தினம் ஏதோஒரு ஒரு புன்னகையையோ, கண்ணீரையோ சந்திச்சுட்டுதான் இருக்கிறோம். அப்படியான ஒரு கதைதான் தமிழரசி பத்தினது" என்று ஆரம்பித்தார்.

“உயிருக்கு உயிரா பழகி, காதலிச்ச ஒரு பெண்ணை தேடி பயணிக்கிற நாயகன் ஜெய். அவளோட நினைவுகள், கிராமத்து மண்ணும், வயக்காடும் தந்த சுகமான அனுபவங்கள் அவனுக்குள்ள வந்துட்டு வந்துட்டு போகுது. அந்த நினைவுகளை சுமந்துகிட்டே தொலைச்ச தன்னோட உயிரை தேடி அலையுறான். கடைசியில அவன் அவளை சந்திச்சானா, இல்லையாங்கறதை இயல்பை தொலைச்சிடாம ரசிகனுக்குப் பிடிச்ச திரைக்கதையில சொல்லியிருக்கேன். காதலியை தேடி செல்ற கதை அதிகமாக வந்திருந்தாலும் திரைக்கதைதான் இந்த படத்தோட பலம்.

எட்டு வயசுல  இருந்து முப்பது வயசு வரைக்கும் ஜெய்க்கு நடக்கிற சம்பவங்கள்தான் திரைக்கதை. திருநெல்வேலிங்கற ஊர் சார்ந்த அடையாளங்கள் பல படங்கள்ல சொல்லப்பட்டிருந்தாலும் அதோட பழமையும், அழகையும், கோபத்தையும் இந்தப் படம் தெளிவா சொல்லும்னு நினைக்கிறேன்.

அப்புறம் என்னோட ஹீரோயின் பத்தி சொல்லியே ஆகனும். படத்துக்கு தமிழ்  முகம் தேவைப்பட்டது. மனோகாவை  புடிச்சோம். நந்தகின்னு பெயர்  மாற்றினோம். நந்தகான்னு ஒரு  சங்கு உண்டு. எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிக்கும்போது இந்த சங்கை ஊதிட்டுதான் ஆரம்பிப்பாங்க. மனோகா இதுக்கு முன்னால சில படங்கள்ல நடிச்சிருந்தாலும் இந்த படத்துல இருந்து அவரோட வாழ்க்கை ஆரம்பிக்கட்டுமேன்னுதான் இந்தப் பெயரை வச்சோம்.

தமிழரசி யார்ங்கிற தேடல்ல கிடைச்ச பொண்ணு.  படத்துல இவரோட பாத்திரம்தான் முக்கியமானது. என்றாலும் படத்துல மற்ற கேரக்டர்கள் எல்லாமே நமக்கு நெருக்கமா இருக்கிற உணர்வை தரும். இவனை போல நம்மூர்ல ஒருத்தரை பார்த்திருக்கோமேங்கற நினைப்பு கண்டிப்பா வரும். இனி காதலைப் பத்தி நினைக்கிறப்போல்லாம் கண்டிப்ப ஒவ்வொருத்தர் மனசுலயும் தமிழரசி பளீர்ன்ணு வந்துட்டுப்போவா" என்று ஒரு நவின இலக்கிய படைப்பாளிக்கே உரிய பக்குவத்துடன் பேசுகிறார்.

நாம் நினைத்த்து போலவே மீரா ஒரு நவீன தமிழ்க் கவிஞர். மலையாளத்திலிருந்து பல படைப்புக்களை மொழிபெயர்த்திருக்கிறார். முக்கியமாக எம்.டி.வாசு தேவன் நாயரின் திரைக்கதைகளில் சில. மீரா கதிரவனின் தமிழரசிக்காக தமிழ்திரை ரசிகர்கள் மட்டுமல்ல, மொத்த கோடம்பாக்கமும் காத்திருக்கிறது..

Comments

Most Recent