இயக்குநர் சங்க மோதல்: பாரதிராஜாவுக்கு கோர்ட் நோட்டீஸ்



சென்னை: விதிமுறைகளுக்கு எதிராக சங்க உறுப்பினர் ஒருவரை நீக்கிய வழக்கில் இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா, இயக்குநர்கள் செல்வமணி, சுந்தரராஜனுக்கு எதிராக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'நேசம் புதுசு' என்ற திரைப்படத்தை இயக்கியவர் வேல்முருகன். ஆட்டோகிராப் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

இப்போது 'மருதாச்சலம்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். இவரை கடந்த அக்டோபர் 2ந் தேதி இயக்குனர்கள் சங்கத்திலிருந்து திடீரென விலக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

தனது மனுவில், "இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் நடந்த போது நான் இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டேன்.

தேர்தல் சமயத்தில் தற்போதைய சங்க நிர்வாகிகளான பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் என்னை அணுகி போட்டியிலிருந்து விலகுமாறு கேட்டனர். அதற்கு நான் மறுத்து விட்டேன். இதையடுத்து அவர்கள் என்னை மிரட்டினார்கள். அப்போதிலிருந்தே அவர்களுக்கு என் மீது பழிவாங்கும் உணர்வு வந்துவிட்டது.

இந்த நேரத்தில்தான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இயக்குனர்கள் சங்கம் ஆளும்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியது.

ஆனால் பின்னர் இதே சங்கத்தினர் முதலமைச்சரை சந்தித்து சமாதானம் ஆகிவிட்டனர். இது சங்கத்தின் நம்பத் தன்மையை கேள்விக் குறியாக்கி விட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கேள்வி கேட்கும் விதமாக நான் சங்க உறுப்பினர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை அனுப்பினேன்.

இது சங்கத்தில் பிளவை ஏற்படுத்தும் நடவடிக்கை என கூறி, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவந்து என்னை நீக்கிவிட்டனர். நான் துண்டு பிரசுரங்கள் அனுப்பியதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.

எனவே என்னை நீக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட 4வது உதவி சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி பால்ராஜ், வரும் 5ந் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்குமாறு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கும், அதன் தலைவர் பாரதிராஜா, செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோருக்கும் உத்தரவிட்டார்.

Comments

Most Recent