ஜூனியர் என்டிஆர் படப்பிடிப்பிலும் தெலுங்கானா போராட்டக்காரர்கள் தாக்குதல்சிரஞ்சீவி மகன், மோகன்பாபு மகன், கிருஷ்ணா மகன் படப்பிடிப்புகளில் நடந்த ரகளையைத் தொடர்ந்து தற்போது ஜூனியர் என்டிஆர் படப்பிடிப்பிலும் புகுந்து தெலுங்கானா போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி கேமராவை உடைத்து எறிந்தனர்.

ஜூனியர் என்டிஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா (இவரது 2வது மனைவிக்குப் பிறந்தவர்தான் ஜூனியர் என்டிஆர்). ஹரி கிருஷ்ணா எம்பியாக இருந்து வந்தார். ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று வலியுறுத்தி இவரும் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனால் ஜூனியர் என்டிஆர் மீதும் தெலுங்கானா போராட்டக்காரர்கள் கோபமடைந்தனர். ஜூனியர் என்டிஆரின் படங்களை தெலுங்கானா பகுதியில் திரையிட விடாமல் தடுத்து வருகின்றனர். இதனால் நயனதாராவுடன் இணைந்து அவர் நடித்துள்ள அதுர்ஸ் என்ற படம் இப்பகுதியில் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் ஆலம் என்ற இடத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஜுனியர் என்.டி.ஆர். நடிக்கும் பிருந்தாவனம் என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று நடந்தது.

தகவல் அறிந்ததும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியினர் விரைந்து வந்தனர். உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். கேமரா உள்ளிட்ட படப்பிடிப்பு சாதனங்கள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. இதனால் படப்பிடிப்புக் குழுவினருக்கு பெரும் பொருட் சேதம் ஏற்பட்டது.

தொடர்ந்து படப்பிடிப்புகளில் தெலுங்கானா போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருவதால் தெலுங்குத் திரையுலகினர் பெரும் கோபமும், அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

என்.டி.ஆர். சிலையும் உடைப்பு...

இந்த நிலையில் அடிலாபாத்தில், தெலுங்கு தேசம் கட்சியை நிறுவியவரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ஆர். சிலையை சிலர் உடைத்து சேதப்படுத்தினர்.

Comments

Most Recent