திருட்டு விசிடியை ஒழித்த முதல்வருக்கு பிப் 6-ம் தேதி திரையுலகம் பாராட்டு விழா!சென்னை: திரைப்பட தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கியதற்காகவும், திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்ததற்காகவும் முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் சென்னையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 6-ந் தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பிலிம் சேம்பர், தென்னிந்திய நடிகர் சங்கம், திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், சென்னை மற்றும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கூட்டமைப்பு, சினிமா பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டுக் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது.

திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட இடம் வழங்கியும், திருட்டு வி.சி.டி. கும்பலை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுத்தற்காகவும் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டுவிழா நடத்துவது என இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

கூட்ட முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை:

தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்து திரைப்படத் தொழிலாளர்கள் வாழ்வில் ஏற்றம் பெறச் செய்தவர் முதல்வர் கருணாநிதி.

திரையுலகம் செழிப்படையவும் திரையுலகை திருட்டு வி.சி.டி. மூலம் சுரண்டி வாழ்ந்து கொண்டிருந்த கும்பலை கூண்டோடு ஒழிக்கும் விதமாக திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்களையும், வைத்திருப்பவர்களையும் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கவும் சட்டம் இயற்றி திரையுலகை வாழ வைத்திருக்கிறார்.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள், தென்னிந்திய நடிகர் சங்கத்தினர், திரைப்படத் தொழிலாளர்கள், சின்னத்திரை கலைஞர்கள் ஆகியோருக்கு சென்னை அருகே 90 ஏக்கர் நிலம் வழங்கி வீடு கட்ட இடம் ஒதுக்கி தாயுள்ளத்தோடு இருக்க இடம் வழங்கி ஆணை பிறப்பித்திருக்கிறார்.

நமக்காக, ஏழை எளியவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி பாராட்டும் விதமான பிப்ரவரி மாதம் 6-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா எடுக்க உள்ளோம்.

படப்பிடிப்பு ரத்து...

அந்த பாராட்டு விழாவில், தமிழ்த்திரையுலகில் உள்ள அனைத்து நடிகர்-நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் ஏனைய பிரிவினரும் கலந்து கொள்கிறார்கள்.

எனவே, பிப்ரவரி 6-ந் தேதி படப்பிடிப்பு மற்றும் திரைத்துறை சம்பந்தமான எந்த வேலையும் நடைபெறாது. இந்த பாராட்டு விழாவில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Comments

Most Recent