ஒரு பொது மேடையில் என்ன பேசுகிறோம் என்ற உணர்வு கிஞ்சித்துமின்றிப் பேசுவதும், பின்னர் அதை நியாயப்படுத்த ஆட்சியாளர்களைத் துணைக்கு அழைப்பதும்தான...
ஒரு பொது மேடையில் என்ன பேசுகிறோம் என்ற உணர்வு கிஞ்சித்துமின்றிப் பேசுவதும், பின்னர் அதை நியாயப்படுத்த ஆட்சியாளர்களைத் துணைக்கு அழைப்பதும்தான் திரையுலகினரின் வாடிக்கையாகிவிட்டது.
இதோ இன்று நடந்த ஒரு விவகாரமான விழா.
ஆர்.பி.சௌத்ரி தயாரித்து, அவர் மகன் ஜீவா நடிக்கும் கச்சேரி ஆரம்பம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது.
இந்த விழாவில் நடிகர் சரத்குமார் பங்கேற்றார்.
ரொம்ப வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட தனது 'புத்தம் புதிய படமான' ஜக்குபாய் முற்று முழுதாக இன்டர்நெட்டில் வெளியாகி, பின்னர் டிவிடி வடிவில் லோல்பட ஆரம்பித்துவிட்ட சோகத்தில் இருந்த அவர், தனது வருத்தத்தை மேடையில் கொட்டினார்.
அவருக்குப் பின்னர் மைக் பிடித்தார் சேரன்...
அவரது பேச்சின் ஒரு பகுதி (நாம் சென்சார் செய்யாமல் தருகிறோம்...)
"(மேடையில் இருக்கும் திரையுலகப் பிரமுகர்களைப் பார்த்து) நீங்கள்லாம் எதுக்கு இருக்கீங்க?. சரத்குமாருக்கு வந்த நிலைமையைப் பார்த்தீங்களா... என்ன செய்யப் போறீங்க?. இனி அந்தப் படம் எப்படி ஓடும்?
திருடனாப் பாத்து திருந்தாவிட்டால்னு பாடிக்கிட்டிருக்கிறது இனி உதவாது. ஒவ்வொருத்தனையும் உதைக்கணும். ஓட ஓட வெட்டணும். ஏண்டா டேய்... திருட்டு டிவிடியா விக்கிறீங்க... இன்டர்நெட்ல இந்த வேலையைப் பண்றவங்க அதுக்கு பதில் போய் விபச்சாரம் பண்ணுங்கடா...
(விழாவுக்கு வந்த ரசிகர்களைப் பார்த்து) நீங்கள்லாம் ஜீவாவோட ரசிகர்களா? (உடனே அவர்கள், 'ஆமா நாங்க தேனியிலிருந்து வந்திருக்கோம்' என்றனர்) என்னய்யா ரசிகர்கள் நீங்க... அதுவும் தேனியிலிருந்து சும்மாவா வருவீங்க... கையில அருவாளோட வர வேணாமா... உங்க கண்ணுல படற திருட்டு டிவிடி- இன்டர்நெட் ஆசாமிகளை வெட்டித் தள்ளுங்க...
இன்னிக்கு சரத்குமார் படத்துக்கே இந்த நிலைன்னா, இன்னும் பெரிய நடிகர்களின் படங்களை யோசிச்சுப் பாருங்க (திரையரங்கில் கொல்லென்று சிரிப்பு).
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கற நடிகர்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன்.
உங்க ரசிகர்களில் பத்துப் பேரை மாவட்டம் தோறும் திருட்டு விசிடி ஓழிப்புக்குன்னு நியமனம் பண்ணுங்க (உடனே சில ரசிகர்கள், 'நாங்க கிளம்பறது இருக்கட்டும்... உங்களுக்கு எத்தனை ரசிகர்கள் இருக்காங்க?' என சவுண்ட் வி, அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தார்!). ஆளுக்கு பத்தாயிரம் ரூபா சம்பளம் குடுங்க. அவங்க வேலையே, திருட்டு விசிடி, இன்டர்நெட்ல பரப்புரவங்கள கண்டுபிடிச்சு பாடம் கத்துக் குடுக்கணும். இதுக்கு திரையுலகம் முழுசா ஆதரவு தரணும.." என்று தனது நீண்ட கூந்தலை விரித்துப்போட்டு பேயாட்டம் போட, திரையரங்கம் எப்படி ரியாக்ட் செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கிப் போனது.
அவரது இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்து சினிமா பிரபலம் ஒருவர், "ஏன்யா இந்த ஆளு இப்படிப் பேசறாரு... திருட்டு டிவிடி அடிக்கிறது யாரு... நெட்ல போடறது யாரு? இதை எந்த பப்ளிக் செய்யறான்... எல்லாத்தையும் சினிமாவுக்கு உள்ள இருக்கிறவன்தானே செய்யறான்... அப்படின்னா முதல்ல அவனுங்களத்தானே வெட்டனும்... அதை விட்டுட்டு ஜனங்கள வெட்டச் சொன்னா என்னய்யா அர்த்தம்? என்று சற்று கோபமாகக் கூறிவிட்டு அரங்கிலிருந்து வெளியேறினார்.
இன்னொரு பக்கம் சேரனின் இந்தப் பேயாட்டப் பேச்சு, மேடையிலிருந்த ராம.நாராயணன், வி.சி.குகனாதன் போன்றவர்களை முகம் சுளிக்கச் செய்தது. ஒரு கட்டத்தில் குகனாதன் தலையிலேயே அடித்துக் கொண்டார்.
Comments
Post a Comment