ரெட்டி மரணத்தில் சந்தேகம்-ரோஜாஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா அல்லது அது திட்டமிட்ட சதியா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இதனால்தான் ஆந்திர மக்களுக்கு அவரது சாவில் தொடர்ந்து சந்தேகம் இருந்து வருகிறது என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய ரோஜா, ராஜசேகர ரெட்டியை சந்தித்து காங்கிரசி்ல் இணைய முயன்றார். இந்தச் சந்திப்புக்கு சில நாட்களுக்குப் பின்னர் தான் ஹெலிகாப்டர் விபத்தில் ரெட்டி பலியானார்.

இந்நிலையில் ரெட்டியின் மரணத்தில் அம்பானி சகோதரர்களைத் தொடர்புப்படுத்தி ஒரு தெலைக்காட்சி செய்தி வெளியிட்டு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நிருபர்களிடம் ரோஜா பேசுகையில்,

ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா அல்லது அது திட்டமிட்ட சதியா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இதனால்தான் ஆந்திர மக்களுக்கு அவரது சாவில் தொடர்ந்து சந்தேகம் இருந்து வருகிறது.

அந்த சந்தேகத்தைப் போக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகள்தான். சிபிஐ இதுவரை நடத்திய விசாரணை விவரங்கள் பற்றி ஆந்திர மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வில்லை.

ராஜசேகர ரெட்டி இறந்து 4 மாதங்கள் ஆன பிறகும் ஹெலிகாப்டர் கறுப்பு பெட்டியில் பதிவான பேச்சு விவரம் என்ன என்பதை கண்டறியவில்லை. இதுதான் சந்தேகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் உள்ளது.

கோதாவரி படுகையில் சமையல் எரிவாயு கண்டு பிடித்ததும் ராஜசேகரரெட்டி மகிழ்ச்சி அடைந்தார். அதை ஆந்திர மக்களுக்கு குறைந்த விலையில் சப்ளை செய்ய முடிவு செய்தார். இதனால்தான் அவர் சென்ற இடம் எல்லாம் சமையல் கியாசை ரூ.100க்கு வழங்கப் போகிறேன் என்று கூறி வந்தார். அந்த கால கட்டத்தில்தான் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மர்மமான முறையில் இறந்து போனார்.

இந்நிலையில் ஆந்திர டி.வி.சேனலில் ஒளிபரப்பான செய்தியை மக்கள் உண்மை என்று நம்பினார்கள். மக்களின் இந்த சந்தேகத்தை போக்குவது மாநில அரசின் கடமை என்றார் ரோஜா.

ரோசய்யாவை நீக்கும் சதி-நாயுடு:

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறுகையில்,

ராஜசேகர ரெட்டியின் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய செய்தி ஒளிபரப்பானது பற்றியும், அதைத் தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஜெகன்மோகன் ரெட்டி தூண்டுதலால்தான் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். தொலைக்காட்சியில் இந்தச் செய்தி ஒளிபரப்பாகும் முன்பே ஜெகன்மோகன் ரெட்டி பெயரில் இயங்கும் `ஜெகன் யுவசேனா' அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு நடத்த அழைப்பு விடுத்தது எப்படி?.

ரோசய்யாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கும் நோக்கத்தில்தான் காங்கிரசார் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனது ஆட்சி காலத்தில்தான் ரிலையன்ஸ் நிறுவனங்கள் ஆந்திராவில் தொடங்கப்பட்டது. அக்கடைகளை தாக்கினால் நாங்கள் சும்மா விட மாட்டோம் என்றார்.

Comments

Most Recent