பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் திரையுலகிலிருந்து ஒய்வு?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் திரையுலகில் இருந்து விரைவில் ஓய்வு பெறவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பையில் சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இதன்பின் உரையாற்றிய அமிதாப் தனது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் திரைப்படத் துறையில் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது. ஆனால் எனது பயணம் முடிந்து விட்டது. நான் விரைவில் ஓய்வு பெறுவதே சிறந்தது என எண்ணுகிறேன். எனது எல்லைக்கோடு முடிந்து விட்டதாகவே உணர்கிறேன் எனக் கூறியதை அடுத்தே இத்தகைய செய்திகள் கிளம்பியுள்ளன. 1969ம் ஆண்டு திரைப்படம் நடிக்கத் தொடங்கிய அமிதாப் இன்று வரை கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக தொடர்ந்து பாலிவுட்டில் இன்னமும் புதிதாக இளம் ரசிகர்களை உருவாக்கி வருகிறார். சமீபத்தில் 13 வயது சிறுவனாக இவர் நடித்த பா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்ததுடன் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கது. ஓய்வுக்குப் பின்னர் அமிதாப் பச்சன் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என அவரது தீவிர ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பாலிவுட்டின் மூத்த நடிகரும் சூப்பர்ஸ்டாரும் ஆன அமிதாப் பச்சன் நடிப்பில் இன்னமும் டீன் பட்டி, சூபைட் எனும் இரு படங்கள் 2010 இல் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent