‌டெலி சி‌ப்‌ஸ்


வழக்கம் போல் இந்த முறையும் தன் படத்தை பெரியகுளம், தேனி உள்ளிட்ட பகுதிகளிலேயே எடுத்து முடிக்க இருக்கிறார் பாலா. ஆர்யா - விஷால் இணையும் இப்படத்தில் சரத்குமார் மகள் வரலெட்சுமிக்கு முக்கிய வேடம். சிம்புடன் நடிக்க வந்த இரண்டாவது வாய்ப்பையும் விட்டு இதில் ஒப்பந்தமாகி உள்ளார் வரு.

அரசியல், இயற்கை சீற்றங்கள், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை "உலகப் பார்வை' என்ற பெயரில் தருகிறது பொதிகை டி.வி. ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இதில், இந்த வாரம் ஹைதி பூகம்ப பாதிப்பு காட்சிகள் சிறப்பு பார்வையாக இடம் பெறுகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கார்த்திகை செல்வன்.

"இளவரசி', "அபிராமி', "விளக்கு வச்ச நேரத்திலே', என வரும் ஆண்டுகளுக்கான சீரியல்களை இறக்கி விட்டன சேனல்கள். கடந்த ஆண்டு "கோலங்கள்' உள்ளிட்ட சில பிரபல சீரியல்கள் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ள, புதிய சீரியல்கள் அந்த இடங்களை நிரப்புகிறது. இதிலும் கலைஞர் மற்றும் சன் குழுமங்களிடையேதான் போட்டி.கமல்ஹாசனின் 2010- ம் ஆண்டுக்கான கால்ஷீட் ஃபுல் ஆகிவிட்டது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் தொடங்கி கௌதம்மேனன் படத்திலும் நடிக்கிறார். இதற்கிடையே நிறுத்தப்பட்ட "மர்மயோகி'யை, "எந்திரன்' படத்துக்குப் பின் தயாரிக்கலாம் என சன் டி.வி. சொல்லி விட்டதால், கமல் செம குஷி.

ஹிந்தியில் டி.வி. புரொடக்ஷன் கம்பெனியை ஆரம்பித்து விட்டார் ராக்கி சாவந்த். பைபிள் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள் தொடராக தயாராகிறது. இந்த தொடரில் மேரி மாதாவாக நடிக்கிறார் ராக்கி. இத்தொடருக்குப் பின் மாயாஜாலக் கதைகளை தொடராக தயாரிக்க இருக்கிறாராம்.

இசை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜெயா டி.வி., இந்த முறை "கர்நாடிக் சிங்கிங் ஐடெல்' என்ற புது இசை நிகழ்ச்சியை தொடங்க இருக்கிறது. 15 வயது முதல் 25 வயது வரையிலான கர்நாடிக் இசை பயின்றவர்கள் இதில் பங்கேற்கலாம். இறுதிச் சுற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு அமெரிக்காவில் நடைபெறும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இசை நிகழ்ச்சியில் வாய்ப்பு உண்டாம்.
கடந்த ஆண்டு "கந்தசாமி', "ஓடிப் போலாமா' உள்ளிட்ட படங்களில் வந்து போன தொகுப்பாளினி மகேஸ்வரி, தற்போது "பாணா' படத்தில் முரளி மகன் அதர்வாவுடன் "ஆத்தாடி பாவாட...' பாடலுக்கு ஆடி முடித்திருக்கிறார். கரு.பழனியப்பன் இயக்கி நடிக்கும் "மந்திர புன்னகை' படத்திலும் கிளாமருடன் முக்கிய வேடமாம்."ராணி ஆறு ராஜா யாரு?' நிகழ்ச்சிக்காக அனுயா, தேஜாஸ்ரீ, சுஜா என நீளும் பட்டியலில் இப்போது கிரணும் வாய்ப்புகள் இல்லாமல் இடம் பிடித்து விட்டார். இன்னும் சில நடிகைகள் இந்த பட்டியலுக்கு முயற்சிக்க மறுத்து விட்டதாம் சன் டி.வி. மார்க்கெட்டை இழந்த நடிகைகளை விட மார்க்கெட் உள்ளவர்களை பிடித்து போட்டு நிகழ்ச்சிக்கு பொலிவு சேர்க்க முயற்சிக்கிறது நிகழ்ச்சி குழு.

தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடலைப் போல், தலைசிறந்த மணமகன் மற்றும் சிறந்த அம்மாவுக்கான தேடலையும் ஆரம்பித்து விட்டது விஜய் டி.வி. குறிப்பிட்ட தகுதியுள்ளவர்கள் பலவித தகுதி சுற்றுகளைக் கடந்த பின்னரே பிற சுற்றுகளுக்கு செல்ல முடியுமாம். பரிசுகள், புதிய நடுவர்கள் என புதுமையான இந்த நிகழ்ச்சி பிப்ரவரி முதல் களம் இறங்குகிறது.

Comments

Most Recent