சென்னை, ஜன.8:""திருட்டு வி.சி.டி.யை விற்பவர்கள், வைத்திருப்பவர்கள் மற்றும் தயாரிப்பவர்கள் மீது குண்டர் சட்...
சென்னை, ஜன.8:""திருட்டு வி.சி.டி.யை விற்பவர்கள், வைத்திருப்பவர்கள் மற்றும் தயாரிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
நடிகர் சரத்குமார் நடித்த "ஜக்குபாய்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திருட்டு வி.சி.டி.யாக தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியானது. இது, திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திருட்டு வி.சி.டி. தயாரிப்பைத் தடுப்பது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் திரைப்பட உலகத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பின்போது, நடிகர்கள் ரஜினி, கமல், திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
அப்போது, முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர். முதல்வரைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறுகையில், ""திருட்டு வி.சி.டியை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனு அளித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்'' என்றார்.
குண்டர் சட்டம் பாயும்: இதைத் தொடர்ந்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
""திரைப்படங்களை ஒளிநாடா மற்றும் குறுந்தகடுகளாக திருட்டுத்தனமாக விற்பவர்கள், வைத்திருப்பவர்கள் மற்றும் தயாரிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசின் "காபிரைட் சட்டம் 1957'}ன்படியும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சட்டத்தின்படி, குறைந்தபட்ச சிறைத் தண்டனையாக ஆறு மாதங்கள் அவர்களுக்குக் கிடைக்க அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்தச் சட்டப் பிரிவுகளை மேலும் தீவிரமாக்க மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் பரிந்துரை அனுப்பப்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அரசின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதே நேரத்தில், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் மூலமாக இந்தத் திருட்டு வி.சி.டிகள் பரவ வழிவகுக்கக் கூடாது. இந்த வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல்வேறு பிரிவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
திரைப்பட பிரமுகர்கள் சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, உள்துறைச் செயலாளர் மாலதி, நிதித்துறை செயலாளர் கு.ஞானதேசிகன், சென்னை போலீஸ் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment