'மானாட மயிலாட' நடன இயக்குனர் ரகுவின் மரணம் - இழப்பின் வலியில் சில நினைவுகள்!

2007  முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியின் நான்காம் பாகத்தில் கார்த்திக், சௌந்தர்யா ஜோடியினருக்கு நடன இயக்குனரக பணி புரிந்து, அனைவரினது மனதையும் கவர்ந்திழுத்த டான்ஸ் மாஸ்ரர் ரகு, கடந்த வாரம் வாகன விபத்தில் பலியாகியமை, அவருடைய ரசிகர்களை மட்டுமல்லாது,  அவரை பற்றி தெரிந்திருக்கும் அனைவருக்கும் ஒரு கணம் அதிர்ச்சியை கொடுத்துச்சென்றுள்ளது.
தனது அடுத்தடுத்த நடன இயக்கங்களுக்கான நடனத்திற்காக எடிட்டிங் வேலைகள் செய்ய, குறிப்பிட்ட ஒரு காரியாலத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விபத்தில், ரகுவும் அவருடன் சென்ற சௌந்தர்யாவும் சிக்கினர்!

இவ்விபத்திலேயே ரகு உயிரிழக்க நேரிட, சௌந்தர்யா படுகாயத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியில், இவ் அறிவித்தல் வெளியாகியிருந்ததுடன், மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான கலா மாஸ்ட்டர் முதல், நடனக்குழுவினர் வரை, அனைவரும் ரகுவின் நினைவுகளை கண்ணீர் மல்க பகிர்ந்துகொண்டது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் கவலையடைய செய்தது.

ரகுவிற்கு சிறிய வயதில் இருந்து நடனத்தில் இருந்த ஆர்வம், மேடை நிகழ்ச்சிகளில், அவரை தனியாக நோக்க வைத்தது. தன்னை மீறி நடனமாடிய அவரது கால்கள், வாழ்க்கையின் வெற்றிப்படிகளிலும் மெல்ல மெல்ல ஏற்றிவிடத்தொடங்கியது.

மானாட மயிலாட நிகழ்ச்சியின் 4 வது பாகத்தில், கார்த்திக் சௌந்தர்யா ஜோடிக்கு நடன இயக்குனராக ஒப்பந்தமாகிய முதல், ஒவ்வொரு எபிசொட்டிலும் அவரின் வித்தியாசமான நடனக்கற்பனை யார் இவர்? என புகழின் உச்சியில் இருந்தவர்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

குறிப்பாக, தாய்ப்பாசத்தினை கருப்பொருளாக, கார்த்திக் சௌந்தர்யாவுக்கு அமைத்துக் கொடுத்திருந்த நடனமும், அதற்கடுத்த பாகத்தில் தூய்மையான காதலை மையமாக கொண்டு அவர் அமைத்திருந்த நடனமும், மற்றைய போட்டியாளர்களின் கண்களிலும் கண்ணீரை வரவைத்திருக்கும்.

அவற்றை பார்த்து விட்டு, உங்கள போல நடன இயக்குனரை பற்றி நாங்க கொமெண்ஸ்ட் சொல்ல எங்களுக்கு பெருமையாக இருக்கிறதென நடுவர்களின் பாராட்டுக்களையும் சேர்த்து வாங்கிக்கொண்டார் ரகு!

உன் Coreagraphy பார்த்து உனக்கென்னாவது கொடுக்கணும் போல இருக்கு, என்ன வேணும்னு என நடுவராக இருந்த குஷ்பு கேட்க, ஒரு 10 இலட்சம் ரூபா.. என வெடுக்கென தனெக்கே உரிய நகைச்சுவை பாணியில் வெடுக்கென பதில் கொடுத்தார் ரகு!

அதற்கு குஷ்பு, 'அத எப்படியும் நீ, முதல் Price ல ஜெயிச்சிடுவ' என சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்!

வைல்ட் கார்ட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்து, கலா மாஸ்ரரின், நேரடி தலையீட்டினால்  அரையிறுதி சுற்றுக்கு நேரடியாக பாய்ந்த ஜோடி, ரகுவின் நடனத்திற்கு கிடைத்த பரிசாகவே கருதியது.

ஆனால் இப்போது ரகுவின் இழப்பினாலும், சௌந்தர்யாவின் நிலையினாலும், கார்த்திக் - சௌந்தர்யா ஜோடி அரையிறுதியில் இனி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டது ரசிகர்களிடையே மேலும் அதிர்ச்சியை கொடுத்தது!

அந்த இழப்புக்கு வேறெதையும் ஈடு கொடுக்க முடியாத நிலையில் மொத்த மானாட மயிலாட குழுமமும் திணறி நிற்கிறது.

ரகுவின் நண்பர்கள், ரசிகர்கள் முதற்கொண்டு, ரகுவை பற்றி தெரிந்திருக்கும் அனைத்து நடன ரசிகர்களுடன் சேர்ந்து நாமும் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கொள்கிறோம்!

'ரகு நீ எங்க கூட தான் இருக்க'

- என்ற குரல்களுடன்!

Comments

Most Recent