கல் ஒன்று... மாங்காய் இரண்டு...!


வசந்த் தொலைக்காட்சியில் காலையில் ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சி தமிழ் ஆர்வலர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளது எனலாம். புதன்கிழமை காலை நிகழ்ச்சியில், மகாபாரத்தில் பாஞ்சாலிக்கு நேரும் அவமானத்தை எடுத்துரைக்கும்போது,  ஆசிரியரின் மொழி ஆளுமைத் திறனும் சொல்நயமும் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை அருமையாக விளக்கினார் திருச்சி கல்யாணராமன். தேவைப்பட்ட இடங்களில் திருக்குறளையும் பாரதியையும் துணைக்கு அழைத்துக்கொண்ட அவரது தமிழ் முழக்கம் இனிமை. வியாழனன்று ஒளிபரப்பான அங்ககக்கவி வீரராகவ முதலியார் பற்றிய சண்முகவடிவேலனாரின் உரையும் சிறப்பாக இருந்தது. கவிஞரின்  வாழ்வியல் நிகழ்வுகளைக் குட்டிக்கதைகளுடன் பாங்காக விளக்கிய விதம் அருமை. ஒவ்வொரு நாள் காலையிலும் இத்தகைய இனிய தமிழ் முழக்கத்தை நமது இல்லங்களுக்குக் கொண்டு வரும் வசந்த் தொலைக்காட்சிக்குப் பாராட்டுக்கள்.


பொதிகைச் சானல் ஒரு பொன்முட்டை இடும் வாத்து என்பது பலருக்குத் தெரியாது (இங்கே, நாம் பொன்முட்டைகள் எனக் குறிப்பிடுவது, நல்ல நிகழ்ச்சிகளை!). ஆனால் அது எத்தனை முட்டைகளை இடும், எப்போது இடும் என்பது இதுவரை யாருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.


புதன்கிழமை காலை பொதிகையில் புகுந்த நமக்கு ஒரு பொன்முட்டை கிடைத்தது. சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் ஆற்றிய உரையின் நேரலை ஒளிபரப்புதான் அது. வேறு எந்தச் சானலிலும் காணக்கிடைக்காததைப் பொன்முட்டையோடு ஒப்பிடுவதில் தவறென்ன இருக்க முடியும்?  அதே நேரத்தில் அதிலிருந்த சிறு குறையையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. ஆளுநரின் ஆங்கில உரையின் போது அதன் தமிழாக்கத்தையும் கீழே கார்டுகளாகப் போட்டிருக்கலாமே? குறைந்தபட்சம் உரையின் சிறப்பம்சங்களையாவது போட்டிருந்தால் அவைத் தலைவர் ஆவுடையப்பன் வந்து தமிழ் மொழிபெயர்ப்பை வாசிக்கும் வரை நேயர்கள் காத்திருக்கத் தேவையில்லையல்லவா?


அரசுத் தொலைக்காட்சி என்பதால் வணிக நோக்கின்றி ஆளுநர் உரையைப் பொதிகையில் நேரலையாக ஒளிபரப்பினார்கள். ஆனால் தனியார் தொலைக்காட்சிகளுக்கு அத்தகைய கட்டாயம் ஏதுமில்லையே?  அதனால், மற்ற சானல்களின் பாடல்களிலும், சீரியல்களிலும் நகைச்சுவைக் காட்சிகளிலும், பங்கு வர்த்தகத் தகவல்களிலும் மூழ்கிக் கிடந்தவர்கள் ஆளுநர் உரையைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை. அரசு இதுவரை செய்தது என்ன, செய்யப் போவது என்ன என்பதைப் பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதுதானே அரசுக்கும், மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் நல்லது?


செய்தி, மக்கள் தொடர்புத் துறையின் செய்திச்சுருளை திரையரங்குகளில் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்பதைப் போல,
தொலைக்காட்சிச் சானல்களும் ஆளுநர் உரை, பட்ஜெட் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளைக் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வந்தால் என்ன? ஆடு மேய்த்தது போலவும் இருக்கும்,  அண்ணனுக்குப் பெண் பார்த்தது போலவும் இருக்கும் என்பார்களே, அதைப்போல, அரசு தனது சாதனைகளை விளம்பரம் செய்தது போலவும் இருக்கும், சமுதாய வளர்ச்சியில் சானல்களுக்கு ஒரு பங்களித்தது போலவும் இருக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா...?


பொதிகையில், மனவள மேம்பாடு குறித்து ஸ்ரீராம் என்கிற மனிதவள மேம்பாட்டு வல்லுனர் புதனன்று வழங்கிய நிகழ்ச்சியில், சிந்தித்தலின் அவசியத்தை வலியுறுத்தினார். அவர் கூறிய கருத்துக்கள் நம்மை மட்டுமல்ல, நிகழ்ச்சியைப் பார்த்த எவரையும் சிந்திக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. வியாழன் மதியம், போலியோ சொட்டு  மருந்தின் அவசியத்தைத் தெளிவாக எடுத்துரைத்த பயனுள்ள கலந்துரையாடலும் பொதிகையின் பொன்முட்டைகளில் ஒன்று எனலாம். பொதிகையில் பொன்முட்டை தேடும் முயற்சியில் இறங்க நினைக்கும் நேயர்களுக்கு வாழ்த்துக்கள். யார் கண்டது! தன்னைப் பற்றியும் நேயர்கள் மத்தியில் தேடல் இருக்கிறது என்பது தெரிந்தால் பொதிகை இடும் பொன்முட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூட வாய்ப்பிருக்கிறது!


புதனன்று பொதிகையின் பொன்முட்டையுடன் ஜீ தமிழுக்குச் சென்றால் அங்கு 'ஆயிரம் தாமரை மொட்டுக்களை ஆனந்தக் கும்மி கொட்ட' அழைத்துக்கொண்டிருந்தார்கள். ஜீ மெலொடிஸ் நிகழ்ச்சியில் சற்று நேரம் "கீதம், சங்கீதம்' கேட்டுவிட்டு வேறு சானலுக்குத் தாவத் தயாரானபோது, 'வைகைக்கரை காற்றே நில்லு' என்ற கெஞ்சலில் கரைந்து வைகைக்கரை காற்று நின்றதோ இல்லையோ, நாம் அங்கேயே நின்றுவிட்டோம். காலை வேளையில் ஜீ மெலொடிஸில் சிக்குவோர் மீள்வது சற்று கடினம்தான் என்பது புரிந்தது.


தினசரி பிற்பகலில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சந்தை' ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி. அச்சு ஊடகங்களில் வெளியாகும் வரிவிளம்பரங்களின் தொலைக்காட்சி வடிவம் என்று அதனைக் குறிப்பிடலாம். வீடு, நிலம், வாகனங்கள் உள்ளிட்ட உங்கள் பொருட்களை விற்கவோ வாங்கவோ வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நிகழ்ச்சி. பொருட்களை மட்டுமன்றித் திறமைகளையும் சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி. நிகழ்ச்சிக்கேற்ற பொருத்தமான தலைப்பு. நிகழ்ச்சியை வழங்கும் துறுதுறுப்பான தொகுப்பாளர் (நல்ல எதிர்காலம் உண்டு) தரும் கூடுதல் தகவல்கள் நிகழ்ச்சியை மேலும் சுவாரசியப்படுத்துகின்றன. சந்தைப்படுத்தும் பொருட்களைக் காட்சிப்படுத்தவும் முயற்சித்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே!


எல்லாச் சானல்களும், சீரியல்கள் என்கிற பெயரில், நான்கு சுவர்களுக்குள்ளேயே காமிராவைத் திருப்போ திருப்பென்று திருப்பி, உருட்டி, மேலும் கீழுமாக ஆட்டி நம்மை மூச்சுத் திணற வைக்கும் நேரத்தில், சில்லென்ற வெளிப்புறப் படப்பிடிப்புடன் தேனிப்பக்கம் நம்மைச் சிறகடிக்க வைக்கிறது விஜய் தொலைக்காட்சியின் 'கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்'. ஒரே பள்ளியில் பயிலும், இரண்டு ஊர்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே அமைந்துள்ள கதைக்களன் சற்று வித்தியாசமானது. ஊர்களுக்கிடையேயான உறவு மாணவர்களின் உறவில் ஏற்படுத்தும் தாக்கங்களை அழகாகச் சொல்கிறார்கள் இந்தத் தொடரில். நட்பு, விரோதம், உரசல்கள், நகைச்சுவை, மகிழ்ச்சி, சோகம் என தொலைக்காட்சித் தொடருக்குத் தேவையான அத்தனையும் உண்டு. நயமான ஒளிப்பதிவும், வட்டார வழக்கில் அமைந்த உரையாடலும், கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பும் தொடருக்கு மெருகூட்டுகின்றன. பார்க்கலாம்.

Comments

Most Recent