வைகைப்புயல் வடிவேலு; சிரிப்பு பல கோடி, அழுகை பத்துக் கோடி!

“ஆஹா! இது ரொம்ப நூதனமால்ல இருக்கு! இப்படியும் கூட கெளம்பிடாய்களா? இப்பவே கண்ண கட்டுதே!” இந்த உரையாடல்களைக் கேட்டாலே உலகத்தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை அனைவரும் விழுந்து சிரிப்பது வாடிக்கை. வைகைபுயல் வடிவேலு திரையில் பேசிய சிரிப்பு வசனங்கள் இவை. ஆனால் இந்த உரையாடல்கள் அத்தனையும் இப்போது அவரது நிஜவாழ்கையில் அவருக்கே பூமாரங்காக திருப்பி தாக்கியிருக்கிறது.

ஒருநாள் படபிடிப்புக்கு ரூ பத்துலட்சம் சம்பளம் பெறுவதாக சொல்லப்படும் நிலையில், சமீபத்தில் வருமான வரித்துறையினர் இவரது வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தியபோது பல போலியான காலிமனைப் பத்திரங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். இவை அனைத்துமே அரசு, மற்றும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களை, பட்டா இடங்கள் எனக்காட்டி வடிவேலுவிடம் விற்கபட்ட போலியான காலிமனை பத்திரங்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

இப்படி வடிவேலு ஏமாந்து போயிருப்பது ரியல் எஸ்டேட் அதிபர்களிடமோ, புரோக்கர்களிடமோ அல்ல. அவரது நெருங்கிய நண்பர்களிடம் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி. வடிவேலுவை சுற்றி எப்போதும் ஜே ஜே என்று துணை காமெடி நடிகர் கூட்டம் அலுவலகம், படப்பிடிப்பு என எல்லா இடங்களிலும் மொய்த்துக்கொண்டே இருக்கும். அவர்களில் சிலர் வடிவேலுவுக்கு நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். ஆலோசகர்களாகவும் இருந்தனர். சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தை எங்கு முதலீடு செய்வது என்று புரியாமல் குழம்பிய வடிவேலுவை, கூட இருந்த இந்த நெருங்கிய நண்பர்கள் ஏமாற்ற முடிவு செய்து, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுங்கள். ஒன்றுக்கு பத்து கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி அவர்களது சதி வலையில் வீழ்த்தியிருக்கிறார்கள்.

நண்பர்களை நம்பி பத்துகோடிக்கும் அதிகாமாக ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யதிருக்கிறார் வடிவேலு. அவரை நம்பவைக்கவும், சொத்துக்கான பணத்தை பெறவும் போலி டாக்குமெண்டுகளையும், போலி நில உடமையாளர்களையும் தயார் செய்து வடிவேலு கண்களில் மண்ணைத்தூவி விட்டார்களாம். ஒரு கட்டத்தில் சுடுகாட்டுக்கு அரசு ஒதுக்கிய நிலத்தையும் வடிவேலுவுக்கு வாங்கி கொடுத்து, கிரி படத்தில் வரும் சோனகிரி கைப்புள்ளையாகவே வடிவேலுவை ஆக்கி அவரது தலையில் கோடிக்கணக்கில் மிளகாய் அரைத்து விட்டார்களாம்.

இந்த மோசடி மூலம் பத்து கோடிக்கும் அதிகமாக இழந்த வடிவேலுவின் பரிதாப நிலையை கைபற்றப்பட்ட டுபாக்கூர் பத்திரங்கள் மூலம் பார்த்து “ நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள் என்பதாவது தெரியுமா?” என்று ரைடுக்கு வந்த அதிகாரிகள் பரிதாப்பட்டு கேட்க, தான் ஏமாற்றப்பட்ட விஷயம் முன்பே தெரிந்தும் வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் வைத்தே அழுத வடிவேலு, வருமான வரி அதிகாரிகள் காட்டிய அனுதாபத்தில் அழுதே விட்டாராம். ஏழுகோடியை கணக்கு வைத்து இழந்தேன். மூன்று கோடிக்கு இந்த செல்லாத பத்திரம் கூட இல்லை என்று ஒரு பெரிய அதிகாரியின் காலை கட்டிக்கொண்டு அழுதாராம். ஏமாற்றிய நண்பர்கள் மீது காவல்துறையில் புகார் சொல்லிச் சென்றார்களாம் அதிகாரிகள். இந்த ரைடில் அதிகம் அள்ளியது வைகை புயல் வீட்டிலிருந்துதானாம். இப்போது படப்பிடிப்புக்கு போகாமல் தமது சாலிகிராம்ம் அலுவலகத்தில் முடங்கி கிடக்கிறார் பரிதாபமாக.

சிரிப்புக்குப் பின்னால் இருக்கு்ம் துயரத்துக்கு சார்லி சப்ளின், சந்திரபாபு, முன்னுதாரணங்கள். இப்போ வடிவேலுவையும் சொல்லலாம் போலுள்ளது..

Comments

Most Recent