பாலிவுட்டிலும் ஒரு 'ஜக்குபாய்'!ஜக்குபாய் படத்தை திரைக்கு வருவதற்கு முன்பே இன்டர்நெட்டில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியது போல பாலிவுட்டிலும் ஒரு திரைக்கு வராத படத்தை யூடியூபில் போட்டு ரிலீஸ் செய்து விட்டனர் குசும்பர்கள்.

இதனால் கடும் டென்ஷனிலும், அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளார் அப்படத்தின் இயக்குநர் சுதிர் மிஸ்ரா.

சரத்குமார், ஷ்ரியா நடித்த ஜக்குபாய் இன்னும் தியேட்டருக்கே வரவில்லை. ஆனால் இன்டர்நெட்டில் வெளியாகி விட்டது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த கோலிவுட் முதல்வரிடம் முறையிட அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸார் அதற்குக் காரணமானவர்களைக் கைது செய்தனர். இதில் ஒருவர் தற்கொலையே செய்து கொண்டார்.

தற்போது படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றி எடுத்து வெளியிடத் தயாராகி விட்டனர். இன்னும் கூட ஜக்குபாய் பல இணையதளங்களில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தேரா கியா ஹோகா ஜானி என்ற இந்திப் படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் யூடியூபில் போட்டு விட்டனர் குசும்பர்கள் சிலர்.

சோஹா அலி கான், நீல் நிதின் முகேஷ், கேகே மேனன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் யூடியூப் மூலம் காணக் கிடைக்கிறது.

சுதிர் மிஸ்ரா என்பவர்தான் இதன் இயக்குநர். இந்த ஆண்டின் கடைசியில் இதைத் திரைக்குக் கொண்டு வர அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆண்டின் தொடக்கத்திலேயே இன்டர்நெட்டில் ரிலீஸ் செய்து விட்டனர் விஷமிகள்.

இதுகுறித்து மிஸ்ரா கூறுகையில், நான் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளேன். இன்னும் படம் முழுமையாக தயாராகவில்லை. ஆனால் அதற்குள் அதை வெளியிட்டு விட்டனர் விஷமிகள். இது அதிர்ச்சி அளிக்கிறது.

எங்கிருந்து படம் லீக் ஆனது என்று தெரியவில்லை. இருப்பினும் இது முழுமையான படமாக இடம் பெறவில்லை. பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்டவை முடியாத நிலையில்தான் இந்தப் படம் இன்டர்நெட்டில் வெளியாகியுள்ளது என்றார்.

தலா 10 நிமிடங்கள் ஓடும் வகையில் மொத்தம் 11 பார்ட்களாக பிரித்து படத்தை யூடியூபில் விட்டுள்ளனர்.

ஜக்குபாயையும் கூட இப்படித்தான் அரை குறையாக நெட்டில் விட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கும் இந்த வியாதி பரவியிருப்பது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Comments

Most Recent