அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்! - அஜீத்தமிழ் சினிமாவையே 'பட்டப் பெயர் வியாதி' பேயாய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.

ஒருத்தர் 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்கிறார், கொஞ்ச நாள் கழித்து 'யங் சூப்பர் ஸ்டார்' என்கிறார். இன்னொருவர் இளைய தளபதி என்று கூற, அவரை விட்டேனா பார் என்று இன்னொரு நடிகர் புரட்சித் தளபதியாக, மற்றொருவரோ சின்னத் தளபதியாகிவிட்டார்.

வாளெடுத்து வந்து ரசிகர்களைக் குத்தாத குறைதான் போங்கள்...

இந்த நிலையில் அஜீத் குமார் ஒரு வரவேற்கத் தக்க முடிவை அறிவித்துள்ளார்.

இனி எந்தப் பட்டப் பெயரும் வேண்டாம். தமிழ்சினிமா எவ்ளவோ மாறிவிட்டது. அந்த மாற்றத்தை உணர்ந்து நானும் இனி பட்டப் பெயர்களை பயன்படுத்துவதில்லை என முடிவெடுத்துள்ளேன் என்கிறார்.

இதுகுறித்து 'அசல்' பட தயாரிப்பாளர்கள் பிரபு மற்றும் ராம்குமாருக்கு அஜீத் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் இப்படிக் கூறியுள்ளார்:

இனி என் பெயருக்கு முன்னால் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் வேண்டாம். படத்திலோ அதன் விளம்பரங்களிலோ தன் பெயரைப் போட வேண்டாம். இதற்குக் காரணம் தமிழ்சினிமாவின் இன்றைய மாற்றம்தான்.

என் போன்ற நடிகர்களையும், ரசிகர்களையும் பொதுமக்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு, இந்த முடிவை நான் எடுத்து இருக்கிறேன்.

என் ரசிகர்கள் கண்ணியமானவர்கள் என்ற கருத்து எப்போதும் பொதுமக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்... புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments

Most Recent