கலைஞர் தொலைக்காட்சிக்குப் பாராட்டு!


வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு கூத்தாட்டக் கலைஞர்களின் வாழ்வை "பூதக்கண்ணாடி' கொண்டு பார்த்தது கலைஞர் தொலைக்காட்சி. பெரியதிரை, சின்னத்திரை, கணினித்திரை, செல்பேசித்திரை என டிஜிட்டல் டெக்னாலஜியின் அசுர வேக வளர்ச்சியில், ஆலமரத்தடிப் புல் போன்று நசுங்கி நலிவுற்று, கண்ணுக்குத் தெரியாமல் கிடக்கும் தெருக்கூத்தின் நிலையை பூதக்கண்ணாடி கொண்டுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. பார்க்க முயன்ற கலைஞர் தொலைக்காட்சிக்குப் பாராட்டுக்கள்!

ஆனால், சமுதாயத்தில் கூத்தாட்டக் கலைஞர்கள் எவ்வாறு பார்க்கப் படுகிறார்கள்? அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதைப் பதிவு செய்யும்போது, தமிழக அரசு  நலவாரியம் அமைத்ததால் அவர்கள் வாழ்வில் வளம் பெருகத் தொடங்கியுள்ளதாகவும் பதிவு செய்தது நிகழ்ச்சியின் நோக்கத்தைக் கேள்விக்குறியாக்கியது.

மேலும் சென்னை சங்கமத்தின் மூலம் தங்களது அந்தஸ்து உயர்ந்திருப்பதாகவும், அதனால் தங்களது வாரிசுகளையும் இதே தொழிலில் ஈடுபடுத்த விரும்புவதாகவும் கலைஞர்கள் சொன்னார்கள். சொன்னார்களா, அல்லது சொல்ல வைக்கப்பட்டார்களா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும், "உடைகள் தைக்கக்கூட வங்கிக்கடன் கிடைப்பதில்லை' என்கிற ஒரு கலைஞரின் புலம்பலில், எங்களுக்கென்று நலவாரியம் இருந்தென்ன பயன்? என்னும் கேள்வியும் தொக்கி நின்றது நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்குப் புரிந்ததோ இல்லையோ, நமக்கு நன்றாகவே புரிந்தது.

மாவட்டச் செய்தியாளர் அனுப்பிய படக்காட்சிகளை அப்படியே சிறப்புக் கண்ணோட்டமாக்கி விட்டார்கள் போலும். படக்காட்சிகளின் தரம் அத்தனை மோசமாக இருந்தது. இத்தகைய சிறப்புக் கண்ணோட்டங்களுக்குத் தரமான கேமராவைப் பயன்படுத்தினால் என்ன குறைந்தா போய்விடுவார்கள்?

பொதிகையில், நல்ல நிகழ்ச்சிகளை இரவு 11 மணிக்கு மேல் அதிகாலை 4 மணிக்குள்ளாக ஒளிபரப்புவது என்று அறிவிக்கப்படாத ஒரு கொள்கை வைத்திருக்கிறார்கள் என்று நண்பர் ஒருவர் கூறியிருந்தார். அது உண்மையா என்று சோதிப்பதற்காக வியாழன் இரவு 11 மணிக்கு உறக்கம் கண்களைச் செருக, பொதிகைச் சானலைத் திருப்பியபோது அங்கு உண்மையிலேயே நமக்கு ஆனந்த அதிர்ச்சி அசோகமித்திரன் வடிவில் காத்திருந்தது. முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்திரனுடனான சந்திப்பைக் கண்டதும் உறக்கம் எங்கோ பறந்துவிட்டது.

செகந்திராபாதில் தமது இளமைக்காலம் தொடங்கி, தமிழாசிரியர் ராஜாபாதரால் தமிழின்பால் ஈர்க்கப்பட்டதையும், பின்னர் கலைமகளும் ஆனந்த விகடனும் அதற்கு நீருற்றி வளர்த்ததையும் நினைவுகூர்ந்தபோது அவர் அந்த காலகட்டத்திற்கே சென்றுவிட்டார். தியாகராஜன் அசோகமித்திரனான விதத்தையும், தண்ணீர், அப்பாவின் சிநேகிதர் போன்ற கதைகளின் கரு உருவான விதம் பற்றியும் அவர் விளக்கிய போது அவரது கதைகளின் உயிரோட்டத்திற்கான காரணம் புரிந்தது.

"சமுதாய மாற்றம் படைப்பிலக்கியத்தால் வராது' என்று ஆணித்தரமாகக் கூறிய அசோகமித்திரனின் தெளிவான பார்வையும், எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இன்றைக்கு எத்தனை பேரிடத்தில் இருக்கின்றன?

எல்லாம் சரிதான், பொதிகையில் ஆடியோ இன்ஜினியர் பணியிடங்கள் அனைத்தும் காலியாக உள்ளனவா? அல்லது அப்படி யாருமே நியமிக்கப்படவில்லையா? அசோகமித்திரனின் மெலிதான குரலைச் சரியாகக் கேட்க முடியவில்லை என்று  தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகரித்தால் தொகுப்பாளரின் கணீர்க் குரல் நம் செவிப்பறையைக் கிழிக்கிறது.  சத்தத்தைக் குறைத்தால் அசோகமித்திரன் குரல் அமுங்கிப் போய்விடுகிறது. நிகழ்ச்சியில் ஆடியோ லெவலை அட்ஜஸ்ட் செய்வதெல்லாம் அனாவசிய வேலை என்று கண்டுகொள

Comments

Most Recent